பாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் உறுதி..!

தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் ‘பாக்யாநகர்’ என பெயர்மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங், ”1590களில் ஹைதராபாத்துக்கு வருகை தந்த குலிகுதூப் ஷா என்ற மன்னன் பாக்யாநகரின் பெயரை ஹைதராபாத் என பெயர் மாற்றம் செய்தார். அந்த காலக்கட்டத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டனர், இந்து கோயில்கள் சூறையாடப்பட்டன. வரும் தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ”ஹைதராபாத் என்ற பெயர் பாக்யாநகர் என பெயர் மாற்றம் செய்யப்படும். அதேபோல் செகந்திரபாத் மற்றும் கரீம்நகரின் பெயர்களும் மாற்றம் செய்யப்படும்” என தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கதின் லொகேஷனில் பாக்யாநகர் என்றே ராஜா சிங் தற்போது பயன்படுத்தி வருகிறார்.

பாக்மதி என்ற நடனமங்கையின் பெயரிலேயே பாக்யாநகர் என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், அவரது அழகில் மயங்கிய மன்னன் குலிகுதூப் ஷா பாக்மதியை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் இஸ்லாம் மதமாற்றமான பாக்மதி தனது பெயரை ஹைதர்மஹால் என்று மாற்றியதாகவும், அதன் காரணமாகவே பின்னர் ஹைதராபாத் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாக்மதி என்ற பெண் வாழ்ந்ததாக கூறப்படும் கதைக்கு ஆதாரம் இல்லை என்றும், இது ஒரு கட்டுக்கதை என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தீபாவளியையொட்டி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Response