சோலோ மாதிரியான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்! -சொல்கிறார் துல்கர் சல்மான்

Dulquer-Salmaan

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘சோலோ’ படத்தை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன் என்று நடிகர் துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சோலோ திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியது.

பாசிடிவாகவும் நெகடிவாகவும் விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம் வெளியான பிறகு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது!

இந்நிலையில், ‘சோலோ’வை கொன்றுவிடாதீர்கள் என்று துல்கர் சல்மான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘‘நான் நினைத்துப் பார்த்ததைவிட படம் நன்றாக வந்திருக்கிறது.

`சார்லி’, `பெங்களூர் டேஸ்’ படத்தைப் போல `சோலோ’ இல்லை என சிலர் சொல்கின்றனர். ஏன் இதில் நடித்தேன் என்றும் கேட்கிறார்கள். இது போன்ற முயற்சி தேவையற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். அந்த மாதிரி வித்தியாசமான படத்தில் நடிக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். வித்தியாசம் என்ற வார்த்தை சினிமாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் ரசிகர்களில் சிலருக்கு வித்தியாம் பிடிக்கவில்லை.

படத்தில் நகைச்சுவையாக நான் செய்துள்ள பாத்திரம் விமர்சனத்துள்ளாகியிருக்கிறது!

டார்க் காமெடி வகை அப்படித்தான் விநோதமாக இருக்கும். அப்படி விநோதமாக வர வேண்டும் என்றுதான் எடுத்தோம்!

உங்களுக்கு அது புரியவில்லை என்பதால், தியேட்டரில் கூச்சல் போட்டு, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்பி, படத்தை தரக்குறைவாக பேசுவது படத்தையே சாகடிக்கும்.

எனவே உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சோலோவை சாகடிக்காதீர்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி திறந்த மனதுடன் படத்தைப் ஒருமுறை பாருங்கள். கண்டிப்பாக ரசிப்பீர்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Response