ஜீவா – விமர்சனம்

பள்ளிக்காலத்தில் இருந்தே விஷ்ணு (ஜீவா)வுக்கு கிரிக்கெட் தான் மூச்சு, சாப்பாடு எல்லாம். அம்மாவை இழந்த அவருக்கு அவருக்கு பக்கத்து வீட்டு சார்லியின் குடும்பம் தான் எல்லாம். இதில் புதிதாக அவர்களுக்கு அடுத்த வீட்டிற்கு குடிவரும் பள்ளி மாணவியான ஸ்ரீ திவ்யாவின் மேல் விஷ்ணுவுக்கு காதல் துளிர்விடுகிறது…

இவர்கள் காதல் தெரிந்த அவரது தந்தை ஸ்ரீதிவ்யாவை வேறு ஊருக்கு அனுப்புகிறார்.. படிப்பில் கோட்டை விடுவதால் திட்டுவாங்கும் விஷ்ணு, கூடவே காதலையும் கோட்டைவிடுகிறார். இந்த சோகத்தில் மூழ்காமல் இருக்க, அவரை கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்த வைக்கிறார் சார்லி..

விஷ்ணுவின் திறமை சில வருடங்களில் அவரை படிப்படியாக மேலே கொண்டுவருகிறது. காதலியும் கல்லூரி மாணவியாக மீண்டும் விஷ்ணுவை சந்திக்கிறார். புதிய அத்தியாயம் தொடங்கும் வேளையில் கிரிக்கெட் குழு தேர்வில் அவரை புறக்கணிக்கிறது.

காதலியின் தந்தையோ, விஷ்ணு தங்கள் மதத்திற்கு மாறுவதோடு, கிரிக்கெட்டை விட்டுவிட்டு, தான் பார்த்து தரும் வேலைக்கு போக சம்மதித்தால் பெண் தருவதற்கு முன்வருகிறார்.. காதல், கிரிக்கெட் இதில் விஷ்ணு ஏதாவது ஒன்றையாவது வென்றாரா..? இல்லை, கிரிக்கெட் அரசியல் அவரை வீழ்த்தியதா என்பது தான் க்ளைமாக்ஸ்..

கடைசி ஓவரில், கடைசி பந்தில் எதிரணியை தோற்கடித்து வெற்றிபெறும் மாயாஜாலம் எல்லாம் இந்தப்படத்தில் இல்லை. இன்று சாதாரணமாக தெருவில் விளையாடும் சிறுவன் ஒருவன், பின்னாளில் வளர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க எப்படியெல்லாம் போராடவேண்டி இருக்கிறது என்பதை அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

விஷ்ணு உண்மையிலேயே கிரிக்கெட் பிளேயர் என்பதால் அவரது கதாபாத்திரத்தில் விஷ்ணுவின் யதார்த்த நடிப்பின் ஆதிக்கம் பற்றி சொல்ல தேவையில்லை…. விஷ்ணுவை அண்ணா என ஆரம்பத்தில் அழைத்து கலாட்ட பண்ணும் ஸ்ரீதிவ்யாவின் அ(ட)ப்பாவி குறும்பு ரசிக்க வைக்கிறது.

சிங்கிள் ரன் கூட எடுக்க முடியாமல் திணறும் சீனியர் பௌலராக வரும் சூரி அவ்வப்போது காமெடியில் ஒன்றிரண்டு ரன்களாக சேர்க்கிறாரே தவிர சிக்ஸர் அடித்தபாட்டை காணோம்.. இன்னொரு கிரிக்கெட் வீரராக நடித்திருக்கும் லட்சுமண் தனது வீரத்தையும் அணியில் இடம் கிடைக்காத விரக்தியையும் சரியாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

துணை கதாபத்திரங்களாக வரும் அனைவரும் யதார்த்த கதை மாந்தர்களாக உலாவருவது திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது. இமானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் இனிமைதான் என்றாலும் வழக்கமான இமானை தேடத்தான் வேண்டியிருக்கிறது.

விளையாட்டில் ஆர்வம் உள்ள பையன்களுக்கு பெற்றோர்கள் தடைபோடவேண்டாம் என்பதையும் திறமை உள்ள வீரர்களை, தேர்வுக்குழுவினர் தங்களது ஜாதி பாசத்தால் தூக்கி எறியவும் வேண்டாம் என்பதையும் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருப்பதற்காக சுசீந்திரனை தாராளமாக பாராட்டலாம்.