குடி கொலைகாரனாக்கும் – கருத்து சொல்ல ஒரு படம்! ‘பிச்சுவா கத்தி’ சினிமா விமர்சனம்

Pichuva-Kaththi3.jpg33

‘குடி கொலைகாரனாக்கும்’ என கருத்து சொல்ல ஒரு படம்!

சரக்கு செலவுக்கு ஆடு திருடிய இனிகோ பிரபாகரன், யோகிபாபு, ரமேஷ் திலக் டீமை, பணத்தை திருட பழக்கிவிடுகிறது காவல்துறை. அந்த ஊர் தாதா அவர்களை அடியாளாக சேர்த்துக் கொண்டு கொலை செய்ய பழக்கி விடுகிறார்.

பழகிய பழக்கம் என்ன முடிவைத் தந்தது என்பதை கத்தியும் ரத்தமுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஐயப்பன்.

Pichuva-Kaththi3

குடித்தல், திருடுதல், காதலித்தல், கொலை செய்தல், தாதாவாக மாறுதல், வருந்துதல் என எந்தவித நடிப்பிலும் இயல்பு தாண்டாத இனிகோ பிரபாகரன்!

‘வேலை வெட்டிக்கெல்லாம் போகாதே, என்னையே சுத்திக்கிட்டிரு’ என இனிகோ மீது காதல் நிரம்பித் ததும்பும் இனிமை இளமை ஸ்ரீபிரியங்கா!

உடல் மொழி, வசன உச்சரிப்பு எல்லா படத்திலும் ஒரே மாதிரிதான். ஆனால், படத்துக்கு படம் கூடுதலாய் ரசிக்க வைக்கும் யோகிபாபு!

தனி டிராக்கில் ‘லவ்’வித் திரிந்து கதையோடு கடைசியில் ஒட்டிக் கொள்ளும் வெள்ளந்தி ஜோடி செங்குட்டுவன் – அனிஷா!

எப்போதும்போல் இன்ஸ்பெக்டராக ஆஜராகி அநியாயம் செய்யும் சேரன் ராஜ்!

கூடவே மொட்டை ராஜேந்திரன், காளி வெங்கட், பால சரவணன்… பங்களிப்பில் யாரும் சோடை போகவில்லை!

எம்.எல்.எம். மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏமாற்றுவதை இன்னும் எத்தனை படங்களில்தான் ஒரே மாதிரி காட்டுவார்களோ?

கதையின் இரண்டாம் நாயகியான அனிஷாவை, கொலையே செய்துவிடும் அளவுக்கு மெயின் ஹீரோ வெறியாய் துரத்தித் திரிகிறார். அதற்கான காரணத்தை இத்தனை பலவீனமாகவா யோசிப்பது?

கதை நிகழ்விடம் கும்பகோணம். கதையில் வருகிற யாருமே அந்த ஊர் வட்டார வழக்கில் பேசுவதாக தெரியவில்லை!

ஆடு திருடக்கூட துப்பில்லாதவர்களை ஆளையே காலி பண்ணும் அளவுக்கு காவல்துறை எப்படி மாற்றுகிறது என்பதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். மட்டுமில்லாமல் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்கிற கருத்து மையப்புள்ளியாக இருக்கிறது.

இருந்தாலும் – சுலபமாய் யூகிக்க முடிகிற, பல படங்களில் பார்த்துச் சலித்த சம்பவங்களின் கோர்வையாக இருக்கிற திரைக்கதை பிச்சுவா கத்தியின் கூர்மையை மழுங்கடிக்கிறது!

Leave a Response