அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறையா?

police3

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. தமிழக காவல்துறை அறிவித்த மூன்று மாத சிறை தண்டனை பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் இடையே பீதியை கிளப்பி உள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்புநிதியிடம் கேள்வி எழுப்பினோம்:

போக்குவரத்து விதிமீறல் குறித்து யார், எத்தகைய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்?

போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் மோட்டார் வாகனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்பிரிவின் கீழ் தான் தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.

1989 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் தான் இந்தியா முழுவதும் போக்குவரத்து துறை இயங்கி வருகிறது. தற்போது பெருகி வரும் வாகன பெருக்கம், மாறி வரும் சூழ்நிலைக்களுக்கு ஏற்ப கடந்த 2016 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் 16 வகையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதில் கூட அபராத தொகையின் அளவு உயர்த்தப்பட்டதே தவிர சிறைத்தண்டனை போன்ற நடைமுறைகள் கொண்டுவரப்படவில்லை. மோட்டார் வாகனச்சட்டம் 177 முதல் 210 பி வரை உள்ள மொத்த பிரிவுகளிலும் சிறைத்தண்டனை கிடையாது.

விபத்து ஏற்படுத்திவிட்டு தலை மறைவாகுதல், உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் விபத்தை ஏற்படுத்துதல், உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடுதல் போன்ற குற்றங்களுக்கு பிரிவு 304(எ), 304(பி) மட்டுமே சிறை தண்டனை உண்டு.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குறியதா?

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது என்ற சட்டத்தின் அடிப்படை, வாகனத்தை இயக்குபவர் அதற்குரிய தகுதியை அடைந்திருக்க வேண்டும், அதாவது உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பதே. உரிமத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதல்ல அதன் அர்த்தம்.

ஒருவேளை சட்டைப்பையில் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அதன் நகலை வைத்துள்ளார் என்றால், காவலர் பிடிக்கும் போது அசல் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்க அவகாசம் கோரலாம், குற்றவியல் நடுவரிடம் அபராதத் தொகையை செலுத்த அவகாசம் கோரலாம்.

அசல் வாகன ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறைத்தண்டனை என்று அறிவித்திருப்பது பற்றி?

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கும் போது லைசென்ஸ் இல்லாமல் இருந்தால் அதற்கு பிரிவு 181-ன் கீழ் ரூ.500 முதல் 5000/- வரை அபராதம் மட்டுமே விதிக்க முடியும்.

அதுவும் இந்த சட்டத்தின் கீழ் அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட காவலரிடம் உடனே கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கான ரசீதை பெற்று 15 நாளைக்குள் நீதிமன்றத்தில் கட்டலாம். இதற்கு சட்டத்தில் இடம் உண்டு.

அபராதத்தை உடனடியாக காவல் அதிகாரியிடம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இல்லை. அப்படி நடைமுறையே இல்லாத போது ரூ.500 கட்ட வேண்டும் அல்லது மூன்று மாத சிறை தண்டனை என்பது எப்படி பொறுந்தும்?

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் எந்த ஒரு அதிகாரியும் நேரடியாக விசாரணை இன்றி தண்டனை வழங்க முடியாது. அதற்கு முதல் தகவல் அறிக்கை, நீதிமன்றம் போன்ற நடைமுறைகள் உள்ளன. ஆகவே மூன்று மாத சிறைத்தண்டனை என்பது இது போன்ற ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் கொண்டுவர முடியாது. இது மக்களை பீதியில் ஆழ்த்து செயலே என்று தெரிவித்தார்.

Leave a Response