Santhanam & Power Star’s ” Kanna Laddu Thinna Aasaiya” – Tamil Movie Review:


கண்ணா லட்டு தின்ன ஆசையா – விமர்சனம்:

திரைப்படத்தின் பெயர்: கண்ணா லட்டு தின்ன ஆசையா

ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்து அந்த படம் கொஞ்சம் சொதப்பலாக அமைய கொஞ்ச நாட்கள் காமெடியை மட்டும் கவனித்து வந்த சந்தானமும், ஏற்கனவே சில படங்களில் நடித்து அவை வெளிவராமலே போன பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்திருக்கும் லட்டு தான் இந்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா”.

பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படமான ” இன்று போய் நாளை வா” படத்தின் தழுவல் தான் இந்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா”. மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

படத்தின் கதை அதே கதை தான். சந்தானம், சேது, பவர் ஸ்டார் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இந்த மூன்று நண்பர்களும் ஒரே பெண்ணை காதலிக்க, அந்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய தனித்தனியாக முயற்சிகளில் இறங்குகின்றனர். அந்த முயற்சிகளின் முடிவில் அந்த பெண்ணை கரம் பிடிப்பது யார்? என்பதை திகட்ட திகட்ட காமெடி கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் மணிகண்டன்.

சவுண்ட் சர்விஸ் நடத்தும் கே.கே. எனும் கால்கட்டு கலியபெருமாள் சந்தானம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் அடிக்கும் லூட்டிகளில் தியேட்டர் குலுங்குகிறது. குறிப்பாக ஹீரோயினோடு இவர் ஆடும் சாவு குத்து, பவர் ஸ்டார் குடும்பத்தை கலாய்ப்பது என ஏகத்துக்கும் விளையாடி இருக்கிறார்.

பவர் குமாராக பவர் ஸ்டார் சீனிவாசன். இவரின் அறிமுக காட்சியே அமர்க்களபடுத்துகிறது. பணக்கார வீட்டு பிள்ளையான இவர் பணத்தை வாரி இறைத்து செலவு செய்வது, பிறந்த நாளில் அழுவது, நிறைய காட்சிகளில் வெவ்வேறு முக பாவனைகள் காட்டுவது என்று அனைத்தும் காமெடிக்கு உதவியிருக்கிறது.

இன்னொரு நாயகன் சேது. அறிமுகமாகும் முதல் படம் தான் என்றாலும் இயல்பாக நடித்துள்ளார். மூன்று பேரும் காதலிக்கும் பெண் தான் நாயகி விசாகா சிங். நன்றாக நடித்துள்ளார். ஒரு குத்து பாடலிலும் ஆடுகிறார்.
விடிவி கணேஷ், கோவை சரளா, சிவசங்கர், தேவதர்ஷினி, நாயகியின் தம்பி, பவர் ஸ்டாரின் அண்ணன், அப்பா என அனைத்து கதாபாத்திரங்களும் காமெடி ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து நடித்துள்ளனர்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. இரவு காட்சிகளிலும் நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் தமன். அனைத்து பாடல்களும் சூப்பர் ரகம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, அடியே அன்னக்கிளியே போன்ற பாடல்கள் தாளம் போடவும், ஆடவும் வைக்கின்றன. பின்னணி இசையும் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப அமைந்து ரசிக்க வைக்கிறது.

நிறைய விளம்பர படங்களை எடுத்துள்ள இயக்குனர் மணிகண்டனுக்கு இது முதல் படம். பெரிய கூட்டணியோடு காமெடியை மையப்படுத்தி எடுத்ததே மிகப்பெரிய பலம். மிகசரியான அளவில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். ஆக பொங்கலுக்கு குடும்பத்தோடு போய் சிரிச்சு ரசிக்க “கண்ணா லட்டு தின்ன ஆசையா” உத்திரவாதம்.