ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்பு சந்தித்தேன்; எம்.பி. ஏ.பி.நாகராஜன் திடுக் தகவல்!

large_nagarajan-mp-27776
கோயம்புத்தூர் மாவட்டம், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.பி.நாகராஜன் எம்.பி. இவர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர். ஏ.பி.நாகராஜன் எம்.பி. நேற்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்:-

“நான் தினகரன் அணியில் இருப்பதால் எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன்மூலம் ஒரு புகாரை கொடுத்து புதிதாக பிரச்சனையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. தற்போது அமைச்சர்கள் எம்.ஏல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முதலமைச்சர் உள்பட அனைவரும் சசிகலா மூலமாகவே பதவிக்கு வந்தவர்கள். தற்போது இவர்கள் சசிகலா, தினகரனை நீக்க தீர்மானம் நிறைவேற்றுவது ஏன்? இந்தக் கட்சியை வழி நடத்த 10 பேருக்குதான் தகுதி உள்ளதா? ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் விலகி கொள்ள வேண்டும்.

மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று சொல்கிறார்கள். அவருடைய ஆன்மா ஒவ்வொருவரிடமும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த சொன்னதா? எனக்கு பின்னர் 100 ஆண்டுகள் வரை இந்த கட்சி இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார்.

அதிமுகவின் அனைத்து தரப்பினரும் கலந்து பேசி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் பேசி இணைய வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு என்னை அழைத்தார். அமெரிக்காவில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்ள கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது படத்தை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார்கள். இதற்கு சசிகலா கூறும் போது, சிங்கம் போல வாழ்ந்தவர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காக வெளியிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள 99 சதவீத நிர்வாகிகள் சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள் தான். குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்களும் ஒதுங்கி கொள்ளுங்கள்.

சசிகலாவை ஒதுக்குபவர்கள் அவர் மூலம் கிடைத்த பதவிகளை திரும்ப தர முடியுமா? மேலும் சம்பாதித்த பணம் மற்றும் பொருட்களை கட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். அதனால்தான் நான் இந்த அணியில் உள்ளேன்.
மனிதனுக்கு நன்றி உணர்வு இருக்க வேண்டும். சசிகலாவால் பதவி கிடைக்கவில்லை என்று யாராவது கூற முடியுமா? அனைவரும் அவரால் தான் பதவி பெற்றுள்ளனர்.

ஜெயலலிதாவின் உத்தரவை என்றும் மதிப்பவன் நான். அ.தி.மு.க.வில் பிரிந்து உள்ள அணிகள் ஒன்று சேரவில்லை என்றால் பல அதிர்ச்சிகரமான ரகசியங்களை வெளியிட வேண்டியது இருக்கும்.
தினகரன் அ.தி.மு.க. இயக்கத்துக்காகவே சிறைக்கு சென்றவர். அவரை ஓரங்கட்டுவதில் என்ன காரணம் உள்ளது. கட்சியை அழிப்பதற்கு யாரும் துணை போக கூடாது. எங்களை போன்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான காரணத்தை வெளியிட வேண்டும்.

நாங்கள் பிரிந்து இருக்கிறோம். பொதுக்குழு கூட்டத்தை பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். எனவே ஒவ்வொருவரும் தனித்தனி நடவடிக்கை எடுக்க வேண்டாம்.

அ.தி.மு.க.விற்கு எதிரான கருத்துகளை நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர், துணை முதல்வர், உள்ளிட்ட அமைச்சர்களின் உண்மை ரகசியங்களை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடுவேன். ஆகவே அவர்கள் அனைவரும் சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Response