Karthi’s “Alex Pandiyan” – Tamil Movie Review:


அலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்:

திரைப்படத்தின் பெயர்: அலெக்ஸ் பாண்டியன்

ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் எனக்கு தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும் என கூறியதோடு நில்லாமல் கடந்த 3 ஆண்டுகளாகவே அவர்களுக்கென்றே படம் எடுத்து சேவை செய்து வருகிறார் கார்த்தி. இந்த முறை அலெக்ஸ் பாண்டியன் என்ற பாப்புலரான ரஜினி பெயரை படத்திற்கு வைத்து வீணாக்கி எடுத்திருக்கும் படமே இந்த பொங்கல் வெளியீடு.

சிறந்த நடிகராக வருவார் என அனைவரிடமும் பாராட்டு பெற்ற கார்த்தி அப்படியே இருக்காமல், தெலுங்கு வருமானத்திற்கு ஆசைப்பட்டு தமிழ், தெலுங்கு இரண்டையும் பேலன்ஸ் செய்ய இந்த மாதிரி மசாலா படங்களை தேர்ந்தெடுத்து அங்கே ஜெயித்து, இங்கே கோட்டை விட்டு கொண்டிருக்கிறார்.
படத்தின் கதை என்று பார்த்தால் ஒரு மெடிசின் சேல்ஸ்க்கு அனுமதி வாங்க முதல் அமைச்சரின் மகளை கடத்தும் வில்லன் கும்பல். அதிலிருந்து மீளும் நாயகி. இந்த ஒரு வரிக்காக 165 நிமிடங்கள் ரசிகர்களை உட்கார வைத்து, பின் முடிவில் “என்னை பார்க்க வந்த எல்லோருக்கும் நன்றி, வணக்கம்” என்று முடிக்கிறார் கார்த்தி.

மேலும் “ரிலாக்ஸ் மாமே, ரிலீஸ் நானே, இப்ப ஊரே என்கிட்டே மாட்டிகிச்சிடா” என கார்த்தி பாடும் போது ரசிகர்களை நினைத்து பாடுவது போலவே தோன்றுகிறது. என்னடா கதைனு சொல்லிட்டு கதைக்குள்ளேயே போகலியேனு நீங்கள் நினைப்பது புரிகிறது. இதுபோலத்தான் படத்திலும் அவர்கள் கதைக்குள் போகவே 2 மணி நேரம் ஆகிறது. அது மட்டுமில்லாமல் இது தான் மொத்த கதை. இதற்கு மேல் சொல்லவும் ஒன்றும் இல்லை.

கதை:
முதலமைச்சர் மகள் அனுஷ்காவை கடத்தும் கூலியான கார்த்தி, பின் உண்மை தெரிந்து மனம் மாறி அவரை காப்பாற்ற போராடுகிறார். இதற்கிடையில் அனுஷ்காவுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட அவரை ஒரு சித்த மருத்துவ மையத்தில் அனுமதித்து விட்டு சந்தானம் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்குகிறார். சந்தானமும் கார்த்தியும் விளையாடும் எலி-பூனை விளையாட்டு ஒரு புறமும், வில்லன் கும்பலின் தேடுதல் ஒரு புறமும் போய் ஒன்றாக இணைகிறது இடைவேளையில். அதன் பின் எப்படி தப்பினார்கள் என்பதே மீதி கதை.
பருத்திவீரன், நான் மகான் அல்ல போன்ற கதையுள்ள படங்களில் நடித்த கார்த்தி மாஸ் ஹீரோ ஆக ஆசைப்பட்டு சமீபமாக இது போன்ற கதைகளை தேர்வு செய்து வருகிறார். கார்த்திக்கு குடும்ப ரசிகர்கள் உருவாகி வரும் சூழலில் முதல் பாதி முழுக்க பார்க்க கூசும் அளவிற்கு இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை விளையாட்டாக பயன்படுத்துதல் என எப்படி நடித்தார் என புரியவில்லை.

மேலும் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் கூட லாஜிக் வேண்டாமா? பறந்து பறந்து சண்டை போடுகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு இது பிடிக்கலாம். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு? மேலும் படம் முழுக்க MGR, சிவாஜி, ரஜினி, கமல் என தேவையில்லாமல் வசனங்கள், பாடல்கள், ஆடல்கள் எதற்கு?
அனுஷ்கா கதாபாத்திரம் சிறுசு என்றாலும் அவரை ரசிக்க முடிகிறது. சந்தானம் காமெடியும் நிறைய இடங்களில் ரசிக்கும்படி இல்லை. சுந்தர்.சி நடித்த “குரு சிஷ்யன்” சந்தானத்தின் ஜெராக்ஸ் தான் இந்த “அலெக்ஸ் பாண்டியன்” சந்தானம். சந்தானத்தின் மூன்று தங்கைகளாக நிகிதா, சனுஷா, அகான்ஷா காமெடி சேட்டை என்ற பெயரில் நடத்தும் கூத்து தாங்க முடியவில்லை.

கம்பெனி ஆர்டிஸ்ட் என்பதால் தேவையே இல்லாத இடத்தில் மனோபாலாவை நடிக்க வைத்து படத்தை மேலும் ஜவ்வாக இழுக்கிறார்கள். எடிட்டரின் கத்திரி இயக்குனரால் சரியாக வெட்டவில்லை. தேவி ஸ்ரீபிரசாத் இசை அரதப்பழசு. சுத்தமாக எடுபடவில்லை. இரைச்சல் காதுகளை துளைக்கிறது.

பிரமாண்டமான பட்ஜெட், பெரிய நடிகர் பட்டாளம் என பெரிதாக செலவு செய்து கதை மட்டும் சிம்பிள்-ஆக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். “மாப்பிள்ளை”யை விட மட்டமான படமாக உருவாக்கியுள்ள சுராஜ்க்கு ஒரே ஒரு வேண்டுகோள். காலம் மாறி விட்டது. நீங்களும் மாறுங்கள் சார். கமெர்சியல் படம் என்றால் கொஞ்சம் கூட லாஜிக் பார்க்ககூடாத என்ன?