Vishal’s “Samar” – Tamil Movie Review:


சமர் – விமர்சனம்!

திரைப்படத்தின் பெயர்: சமர்

படம் பூஜை போட்டதிலிருந்தே நிறைய பிரச்சினைகள், குழப்பங்கள் என சமர் படத்துக்கு ஏராளமான தடைகள். அனைத்து தடைகளையும் சமாளித்து ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியாகியுள்ளது சமர். “தீராத விளையாட்டு பிள்ளை” இயக்கிய திரு மறுபடியும் விஷாலுடன் சேர்ந்து இருக்கிறார். மேலும் ஆர்யா நடிக்க வேண்டிய படத்தை நான் கடன் வாங்கி நடிக்கிறேன் என்று விஷால் உண்மையை உடைத்த படம் “சமர்”. இதுவும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டது.

யூகிக்க முடியாத கதை. தமிழுக்கு மிகவும் புதிது. ட்ரெக்கிங் கைடு ஆன விஷாலும், சுனைனாவும் காதலிக்கின்றனர். சரியான புரிதலின்றி பிரிய நேரிடுகிறது. பின் பாங்காக் செல்லும் சுனைனாவிடம் இருந்து கடிதம் வர அங்கு செல்லும் விஷால், நிறைய பிரச்சினைகளில் மாட்டிகொள்கிறார். அவருக்கு உதவுகிறார் த்ரிஷா. அந்த பிரச்சினைகளை விஷால் கண்டு பிடித்தாரா? மீண்டாரா? யார் காரணம் என்ற உண்மையை எப்படி கண்டுபிடித்தார் என்பதே முழுநீள கதை.

விஷால் நன்றாகவே நடித்துள்ளார். வாட்டசாட்டமாக மலைகளிலும், காடுகளிலும் இவர் நடக்கும் போது கச்சிதம். சண்டைக்காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதாலேயே மனிதர் படம் முழுக்க சிரிக்கவே இல்லை.

இரண்டு ஹீரோயின் கதை என்று நினைத்து உட்கார்ந்தால் ஒரு ஹீரோயின் மட்டும் தான் கதைக்குள் வருகிறார். மற்றொருவர் கதைக்கு அடிபோட்டு செல்கிறார். த்ரிஷா திரையில் அழகாக இருக்கிறார், நன்றாகவே நடித்தும் இருக்கிறார். சொற்ப நேரமே வந்து செல்கிறார் சுனைனா. மிகவும் சின்ன கேரக்டர்.

கடவுள் என சொல்லி கொண்டு இரண்டாம் பாதியில் வலம் வரும் வில்லன்கள் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், சக்கரவர்த்தி மிரட்டல். சாவையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் வில்லன்கள். படத்தில் நடித்த ஜெயபிரகாஷ், ஜான் விஜய், சம்பத், ஸ்ரீமன் என்று அனைவருமே தங்களின் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். 90 சதவீத படம் வெளிநாட்டிலேயே படமாக்கபட்டிருக்கிறது. அதற்கேற்ற கதாபத்திர தேர்வு கச்சிதம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களை விட தரணின் பின்னணி இசை ரசிக்கும் விதம். குறிப்பாக காதல் காட்சிகளில் வரும் இதமான இசை வருடல். அங்காடி தெருவை படம் பிடித்த அதே ரிச்சர்ட்.M.நாதனின் ஒளிப்பதிவு நிறைவு.

டைரக்டர் திரு திரைகதையில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருந்தல் படம் அனைவரையும் கவர்ந்திருகும். படத்தின் முதல் பாதியில் இருந்து கிளைமாக்ஸ் வரை என்ன நடக்கிறது, யாரு சதிகளை செய்யுறாங்க, எதற்காக என்ற ஒரு எதிர்பார்ப்பு படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது. சிக்கலான கதையை கையாளும் போது சில குறைகள் வருவது தவிர்க்க முடியாதது. ஆனாலும் புது முயற்சியை தைரியமாக எடுத்த டைரக்டர் திருவை பாராட்டலாம். தனியாக காமெடி ட்ராக் வைத்து திணிக்காததற்கு இயக்குனர் திருவுக்கு கோடி நன்றிகள்.