விநாயகருக்கு 36 கிலோ கொழுக்கட்டை படையலாம் !

ganaba
விநாயகர் சதுர்த்தி விழா நாளை, (ஆகஸ்ட் 25ஆம்) தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை உள்பட விதவிதமான வடிவங்களில், பல வண்ணங்களில் அழகழகான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மிகப்பெரிய அளவில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமோற்சவ விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 108 சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

எட்டாம் நாள் திருவிழாவான நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சித்தி புத்தி சமேத சக்தி விநாயகருக்கு மாலைகள் மாற்றப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்படும் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து விநாயகருக்கு படையல் போடும் நிகழ்வு நடந்தது. இதில் விநாயகருக்கு 36 கிலோ எடைகொண்ட ஒரே முக்குறுணி கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதைக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விநாயகருக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொழுக்கட்டை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று சுவாமி பல்லக்கில் வீதி உலாவும் இசக்கி அம்மனுக்கு அன்னப் படையலும் நடைபெறுகிறது.

Leave a Response