ஸ்டைல மாத்துங்க தல! ‘விவேகம்’ சினிமா விமர்சனம்

vivegam rivew
படத்தின் அத்தனை ஃபிரேமிலும் ‘அஜித்தாதிக்கம்’ செலுத்தும்படி மற்றொமொரு படம்!

நெருங்கிய நண்பன் செய்கிற துரோகத்தால் தன் நாட்டுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பை முறியடிக்கும் சர்வதேச உளவு அதிகாரியின் சாகசங்கள்தான் விவேகத்தின் கதைக்களம்!
தமிழ் சினிமாவில் இது முதல் முயற்சி என்கிறார் அஜித்துடன் 3வது முறையாக கை கோர்த்திருக்கும் இயக்குநர் சிவா.

கம்யூட்டர் ஹேக்கிங், சூறாவளியாய் சுழன்று பறக்கும் பைக் சாகசங்கள் சண்டைக் காட்சிகள் என மேக்கிங்கில் ஹாலிவுட் படம் பார்க்கும் பிரமிப்பை தமிழ் சினிமா ரசிகனுக்குத் தருவதற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். கதையில் வலுவில்லாததாலும் இருக்கிற கதையும் புரிபடாத வகையில் இருப்பதாலும் அந்த முயற்சி கடலில் பெய்த மழையாகியிருக்கிறது!

உடற்கட்டில் இதுவரை இல்லாத முரட்டுக் கெத்து காட்டுகிறார் தல. மற்றபடி தனக்கேயுரிய ஸ்டைலில் இழுவையாக வசனம் பேசுவது, தனக்கெதிரான அத்தனை பலத்தையும் அசால்ட்டாக முறியடித்து நிமிர்வது என்பதெல்லாம் அஜித் ரசிகர்களே ‘முடியல தல’ என்று சொல்லும் ரகம். ஸ்டைலை மாத்துங்க தல!

காஜல் அகர்வால் பட்ரோஸுக்கு பட்டுப்புடவை உடுத்தியதுபோல் ஹோம்லி லுக்கில் கொள்ளை அழகாக வருகிறார். மேடத்துக்கு நடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது!

அக்ஸராஹாசன் அறிமுகமாகும் முதல் தமிழ்ப் படம். ’நடாஷா’ என்ற அந்த கதாபாத்திரத்துக்கு முகபாவங்களால் முடிந்தமட்டும் உயிர் கொடுத்திருக்கிறார் கமல் பொண்ணு!

கோட் ஷுட்டுடன் பில்லா படங்களில் அஜித் நடப்பதுபோல் நடந்துகொண்டே வில்லத்தனம் செய்கிறார் விவேக் ஓபராய். அந்த மேன்லி லுக்கில் வில்லத்தனத்தையும் தாண்டி ஹீரோயிசம் அள்ளுகிறது!

அங்குமிங்குமாய் வந்துபோகும் கேரக்டர்களில் கருணாகரன் மட்டுமே ஓரளவு ஸ்கோர் செய்கிறார்!
திரைக்கதையோட்டத்துக்கும், அனல்பறக்கும் துப்பாக்கி வேட்டை காட்சிகளுக்கும் தன் அதிரடி இசையால பலம் தந்திருக்கிறார் அனிருத். ‘தலை விடுதலை’ பாடலும் விறுவிறுப்பு!!

ஆஸ்திரியா, பல்கேரியா போன்ற அயல்நாடுகளின் அகன்று விரிந்த அழகையெல்லாம் வாரிச் சுருட்டி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி!

ஆங்கில வசனங்கள், டப்பிங் குரல்கள் சற்றே எரிச்சலடையச் செய்தாலும் காட்சிகளின் விறுவிறுப்பு, ஹை பை மேக்கிங், வெளிநாட்டு லொகேஷன்கள் விவேகத்தை சற்றே தாங்கிப் பிடிக்கின்றன!

Leave a Response