Tamil cinema industry goes for fast:

மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து போராடும் தமிழ் திரையுலகம்:

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 7-ந் தேதி ஒட்டுமொத்த திரை உலகமும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது.

இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், “2010- ம் ஆண்டிலேயே திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நேர்முகமாகவும், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மறைமுகமாகவும் சுற்றறிக்கை மூலம் சேவை வரி விதிக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த திரையுலகின் கோரிக்கைகளை ஏற்று அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திரையுலகிற்கு சேவை வரி இருக்காது என்று அறிவித்தார்.

ஆனால், 2012-ல் மத்திய நிதிநிலை அறிக்கையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தவிர ஏனைய திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கும் 1.7.2012 முதல் 12.3% சேவை வரி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களின் பொழுது போக்காக கருதப்படும் திரைப்படம், தொலைக்காட்சி தொழிலில் ஈடுபட்டுள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த வரி விதிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து உள்ளனர். எனவே, சேவை வரி விதிப்பை கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஜனவரி 7-ந் தேதி அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்றார்.