”புதிய இந்தியா என்பது வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கக் கூடாது!” -சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

Ramnath-Kovind2

நாட்டின் 71-வது சுதந்திர தினம் 15.8. 2017 இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு நேற்று சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம்நாத் கோவிந்த் ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இது. உரையில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இந்த சுதந்திரம் நமக்கு எளிதாக கிடைத்த ஒன்றல்ல. லட்சக்ககணக்கானோர் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும் நமக்கு கிடைத்த பரிசுதான் இது.

எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களின் தீரத்தாலும், தியாகத்தாலும் மட்டுமே இன்று நாம் சுதந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாது.

ஆங்கிலேயர்களின் அடிமைத் தளத்திலிருந்து விடுபட, இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வீறு கொண்டு எழுந்து போராடினர். அப்போது, அவர்கள் யாரும் ஜாதியையோ, மதத்தையோ, மொழியையோ பார்க்கவில்லை. இந்தியர் என்ற ஒரே உணர்வுடன் மட்டுமே அவர்கள் ஒன்றிணைந்திருந்தனர். இந்த வேற்றுமையைக் கடந்த ஒற்றுமையே நமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

அந்த வீரர்களின் தியாகத்தால், நாம் இன்று 71-ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த தினத்தில் நாம் ஓர் உறுதியேற்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நமது முன்னோர்கள், எவ்வாறு ஜாதி, மதங்களைக் கடந்து நின்றார்களோ, அதேபோல் நாமும் பேதங்களைக் கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதே அந்த உறுதிமொழி.

உலக அளவில் பார்க்கும்போது, இந்தியா பல்வேறு நாடுகளை விட வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. அதேவேளையில், வளர்ச்சியில் இன்னமும் நாம் பல உயரங்களைத் தொட வேண்டியிருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அந்த உயரங்களை அடைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமாகும். ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகிய வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றுபட்டால் மட்டுமே ‘புதிய இந்தியா’ என்பது சாத்தியமாகும்.

ஒற்றுமை மற்றும் நன்னடத்தை மீதான நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் அறிவியல் மீதான தெளிவான பார்வை, சட்டம் மற்றும் கல்வியின் தர மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியே நாம் கூறும் புதிய இந்தியாவுக்கு அடித்தளமாகும்.

எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் நாம் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். அந்த மகிழ்ச்சியான தருணத்தில், புதிய இந்தியாவுக்கான அனைத்து மைல் கற்களையும் நாம் அடைந்திருக்க வேண்டும்.

புதிய இந்தியா என்பது வேறொன்றுமில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் வீடு, மிகை மின்சாரம், தரமான சாலைகள், தொலைத்தொடர்பு வசதி, நவீன ரயில்வே மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதே புதிய இந்தியாவாகும். அதேசமயத்தில், புதிய இந்தியா என்பது வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கக் கூடாது. மனிதநேயம், மனிதாபிமானம் ஆகியவற்றின் முழு தொகுப்பாகவும் புதிய தேசம் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது, நமது புதிய இந்தியா கனவு விரைவில் நிஜமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டில் அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான நல்லுறவு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது.

நாட்டுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால், எத்தகைய வலியையும் தாங்க நமது மக்கள் தயாராக இருக்கின்றனர்.

உதாரணமாக, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கூறலாம். இந்த நடவடிக்கைக்கு நமது மக்கள் அளித்த ஒத்துழைப்பு மகத்தானதாகும்.

இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கும்பட்சத்தில், புதிய இந்தியாவை வெகு சுலபமாக உருவாக்கிவிடலாம் என தமது சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Response