வறண்டு கிடக்கும் பூண்டி ஏரி ! தமிழக அரசு தீர்வு காணுமா?

poondi
பருவ மழை பொய்த்ததாலும், கடுமையான வெப்பத்தாலும், பூண்டி ஏரியில் தண்ணீர் இன்றி வறண்டு, தரைப்பகுதி வெடித்து கிடக்கின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு ஆந்திர மாநில அரசிடம் பேசி, கிருஷ்ணா நதி நீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு ஆண்டுதோறும், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து 12 டிஎம்சி தண்ணீர் பெறப்படும். இதனுடன், பருவ மழை காலத்தில் சேகரமாகும் நீர், இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சென்னை மாநகரக் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டில் கடுமையான கோடை வெப்பத்தாலும், கடும் வறட்சியாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கியது. மேலும், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தேவையான அளவு நீர் திறக்கப்படவில்லை. இதனால், பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலுமாக வற்றி, கட்டாந்தரையாக காட்சி
யளிக்கிறது. இது சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. ஏரியை நம்பியிருந்த மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முற்றிலுமாக குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response