தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பரவலாக மழை… நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

bird1
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் இடையே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலு குறைந்து வருகிறது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதி முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக கடலோரப் பகுதி வழியாக நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இன்றும் பரவலாக மழை நீடிக்கும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

Leave a Response