தனித்துவமான ’தரமணி!’ ’தரமணி’ சினிமா விமர்சனம்

Taramani
‘என் படம் இப்படித்தான்’ என்று தனி ரூட்டில் போகிற தரமான, மிகச்சில இயக்குநர்களில் ராமும் ஒருவர். இதை இப்படித்தான் சொல்வேன் என்ற நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் நகராதவர்.

அந்த நிலைப்பாட்டிலிருந்து இயக்கியிருக்கும் படம் ‘தரமணி!’

கணவரைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியாவும் காதலியோடு சச்சரவில் இருக்கும் வசந்த் ரவியும் ஒரே புள்ளியில் ‘இணை’கிறார்கள். காலச் சூழலில் பிரிகிறார்கள்.

வசந்த் ரவியின் காதலி அஞ்சலி மீண்டும் வசந்த் ரவியின் வாழ்க்கையில் வருகிறார். வசந்த் என்ன முடிவெடுத்திருப்பார் ? ராமின் திரைக்கதையில் காலத்துக்கேற்ற பதிலிருக்கிறது!

ஹை பை மாடர்ன் வாழ்க்கை, கணவரைப் பிரிதல், மகனுடன் தனித்து வாழ்தல், இன்னொருவருடன் சமூகம் வெளிப்படையாய் ஏற்காத புதிய வாழ்க்கை என நடிப்பின் பரிமாணங்களில் படபடவென ஏறியிருக்கிறார் ஆண்ட்ரியா.

முதல் படம் என்று தெரியாதபடி நடித்திருக்கிறார் வசந்த் ரவி! படம் முழுக்க வராவிட்டாலும் நிறைவாக இருக்கிறது அஞ்சலியின் நடிப்பு!

குமரி மாவட்ட தமிழ் பேசிக் கொண்டு ’பர்ணபாஸ்’ என்ற கேரக்டரில் வருகிற அழகம் பெருமாளும் கவர்கிறார்!

தம்பதியரிடையே நிகழும் உறவுச் சிக்கலை மிக அழகாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராமின் காட்சிகளை அதே உணர்வுடன் ஆடியன்ஸுக்கு கடத்தும் பெரும் பொறுப்பை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

கரடு முரடு வாழ்க்கைச் சூழலின் நீள அகலங்களை நேர்த்தியாக பதிவு செய்திருப்பதால் சென்ஸார் தந்த Aகப்பட்ட பிரச்னைகளையும் தாண்டி ஜெயித்திருக்கிறது தரமணி!

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஒருவர் இன்னொருவருடன் பேசியது காதில் விழுந்தது. அது, ”இரண்டரை மணி நேர படத்துல பத்து நொடிகூட தேவையில்லாத சீன் இல்லை!”
தரமணியின் தரத்துக்கு ஒற்றைச் சான்று!

நல்ல படத்தை தயாரித்த நிறுவனத்துக்கும் ஒரு ஷொட்டு!

Leave a Response