‘ஸ்டைலிஷ் தனுஷ், அலப்பறை அமலா பால், கண்ணிவெடி கஜோல்… ‘வேலையில்லா பட்டதாரி 2’ சினிமா விமர்சனம்

dhanush-kajol-vip-2
தனுஷ் படம் எப்படியெல்லாம் இருக்குமோ அப்படியே இருக்கிறது விஐபி 2! தனுஷே கதை வசனம் என்பதால் கதை தன்மீது கூடுதலாய் பெப்பர் தூவிக் கொண்டிருக்கிறது!

தென்னிந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தக் காரர் கஜோல். கட்டுமான நிறுவனமொன்றில் பணிபுரிகிற இன் ஜினியர் தனுஷ். தனுஷை தன் நிறுவனத்தில் வேலை செய்ய அழைக்கிறார் கஜோல். வலுவான காரணங்களை முன்வைத்து மறுக்கிறார் தனுஷ்.
இருவருக்குள்ளும் தொடங்குகிறது நீயா? நானா?
கதை இம்புட்டுதான், வழக்கமானதுதான். ஆனால், இன்றைய இளைஞர்களைக் கட்டிப் போடும் விதமான திரைக்கதையால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்! அப்படியே கருத்தும் சொல்லியிருக்கிறார்!

திறமையை விற்காமல் தன்மானத்தை இழக்காமல் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னுக்கு வரும் ஹீரோயிஸக் கதைக்களம். அதில் தனக்கே தனக்கென்று இருக்கிற ஸ்டைலை இன்னுமொரு படி மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறார் தனுஷ்!

தனுஷுக்கு கண்டிப்பான மனைவியாக அமலாபால். கணவனுக்கு வேலையில்லா பட்டதாரி ஆனதும் காட்டுகிற கனிவு _ தூறல் பொழுதில் காதலியோடு லெமன்சாறு பிழிந்த மசாலாபொரி சாப்பிடுவதுபோன்று ஜிவ்வென்றிருக்கிறது.

கார்ப்பரேட் திமிரை சுமந்து திரியும் பவர்ஃபுல் கேரக்டரில் கஜோல். உடல்மொழியில் பின்னியிருக்கிறது அந்த மின்சாரக் கனவு!

‘பிரிட்ஜ் தண்ணிய குடிச்சாலும் பானைத் தண்ணிய குடிச்சாலும் யூரின் வந்தா போய்த்தானே ஆகணும்!’ _இப்படி பல இடங்களில் வசனங்கள் பளீரென தெறிக்கிறது. வசனகர்த்தா தனுஷ்!

இயல்பு மாறாத நடிப்பில் சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், ஜி.எம். குமார்… போனஸ் தகவல் படத்தில் ‘பிக் பாஸ்’ ரைஸாவும் இருக்கிறார்!

ஷான் ரோல்டனின் மெனக்கெடலை பாடல்களை விட பின்னணி இசை அடையாளம் காட்டுகிறது. படத்தில் வருகிற கட்டடங்கள் போல ஒளிப்பதிவின் உயரமும் அதிகம்!

படம் நெடுக அத்தனை டெரர் காட்டிவிட்டு, கிளைமாக்ஸில் கஜோலும் தனுஷும் வெந்நீரில் முக்கிய பன் மாதிரியாவது பொருந்தவில்லை!

லாஜிக் ஓட்டைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால்‘வேலையில்லா பட்டதாரி’யின் பில்டிங் ஸ்ட்ராங்காதான்!

Leave a Response