கழிப்பறை இல்லாவிட்டால்… ரேசன் பொருட்கள் இல்லை

open_def_2264194f
இனி வீடுகளில் கழிப்பறை இல்லாவிட்டால், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை செயலர் ஜவஹர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கழிப்பறை கட்ட வசதியில்லாத புதுச்சேரி மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ.20 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது. இந்த நிதிதான் நாட்டில் வழங்கப்படும் நிதிகளிலேயே அதிகமானது.
இந்த நிதியை பெற்ற பயனாளிகள் முறையாக பயன்படுத்தாததால், அகில இந்திய அளவில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான நகரங்களின் தர வரிசைகுறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், புதுச்சேரி நகராட்சி 189வது இடத்திலும், உழவர்கரை நகராட்சி 206வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால், புதுச்சேரி அரசின் கழிப்பறை கட்டும் நிதியை பெற்றவர்கள், வரும் 20ம் தேதிக்குள் கழிப்பறைகளை கட்ட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கழிப்பறைகளை கட்டி முடிக்காவிட்டால், கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருள்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும்.

கழிப்பறைகளைக் கட்டி முடித்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தகுதியுடமை இருப்பின், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Response