யப்பா சாமி அளவிடு… ‘சதுர அடி 3500’ சினிமா விமர்சனம்!

sathura ati 3500

கொலை, அதை துப்பறியும் போலீஸ் என்ற கதைக்களத்தை மையமாக வைத்து இன்னொரு படம்.

முழுமையாய் கட்டி முடிக்கப்படாத அந்த கட்டடத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி பரலோகம் போகிறார். போனவர் சும்மாயிருக்காமல், தன் கேஸை துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரி முன் ஆவியாய் வந்து சுற்றுகிறார். கேஸை முடிக்கவிடாமல் சுத்தலில் விடுகிறார்.

அதையெல்லாம் தாண்டி நடந்தது கொலையா, தற்கொலையா என்பதை அந்த புத்திசாலி(?) போலீஸ் அதிகாரி கண்டுபிடிப்பதே கதை.

போலீஸ் அதிகாரியாக நிகில் மோகன். அவரது உயரம் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. கேஸில் துப்பு கிடைக்காமல் கிறுக்குத்தனமாய் அங்குமிங்கும் அலைகிறார். பேயோட்டும் சாமியாரிடம் குறி கேட்கிறார். இன்னும் என்னவெல்லாமோ செய்கிறார்! ‘யப்பா சாமி அளவிடு’ என கதறவேண்டும் போலிருக்கிறது.திரைக்கதையில் லட்சணம் அப்படி!

ஒற்றைப் பாடலுக்கு கலர்ஃபுல்லாய் ஆடிவிட்டுப் போவதைத் தவிர கதாநாயகிக்கு வேறெந்த வேலையுமில்லை!

களம் சரியாக அமைந்திருந்தால் இனியா நடிப்பில் வாகை சூடியிருப்பார். அமையவில்லை!
ரகுமான் எதற்காக வந்தார் எங்கே போனார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். படத்தில் பிரதாப் போத்தனும், பரவை முனியம்மாவும் உண்டு.

கோவை சரளா _ எம்.எஸ். பாஸ்கர் இருக்கிறார்கள். சிரிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ‘நோ சான்ஸ்’ என்கிறார்கள்.

இயக்குநர் ஜெய்சன் கேரளாவைச் சேர்ந்தவராம். நல்ல படங்கள் எடுக்கத் தெரிந்த அக்கட தேசத்திலிருந்து இப்படியொரு இயக்குநர்! திருஷ்டிப் பரிகாரம் வேண்டுமல்லவா?

Leave a Response