நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து இதனை வலியுறுத்தியுள்ளனர். இத்துடன் இன்று டெல்லி சென்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் இதே கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில், தமிழக அரசு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனையும் அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மத்திய அமைச்சர் நட்டாவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீர் தேர்வில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஎஸ்சி மாணவர்கள் தாக்கல் செய்த கேவியட் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இறுதியில், இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.