சுவாரஸ்யமான காமெடிக்காக பார்க்கலாம். ‘பாக்கணும் போல இருக்கு’ சினிமா விமர்சனம்!

Paakkanum-Pola-Irukku_

பாக்கணும்போல இருக்கு

(எஃப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் துவார் ஜி. சந்திரசேகர் தயாரித்து, எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருக்கும் படம்.)

டீனேஜ் என்பது காதலிக்க மட்டுமே சரிப்படும். கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த அதையும் தாண்டி சில பக்குவங்கள் தேவை. அதற்கு டீனேஜை கடந்து சில வருட காத்திருத்தல் அவசியம். _இதுதான் பாக்கணும் போல இருக்கு படத்தின் ஒன்லைன்!

ஹீரோ பரதனும் ஹீரோயின் அன்ஷிபாவும் ஒரே ஊர்க்காரர்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தவர்கள். பருவ வயது வந்ததும் காதலைச் சுமந்து திரிகிறார்கள்.
இப்படி போகிற கதையில் அடுத்த சீன் இரண்டு வீட்டிலிருந்தும் காதலுக்கு எதிர்ப்பு வந்தாக வேண்டுமே? அதுதான் இல்லை, இரண்டு பக்கமும் சம்மதிக்கிறார்கள்!
ஹீரோவின் அண்ணனுக்கும் ஹீரோயினின் அக்காவுக்கும் அதுவரை கல்யாணம் ஆகாத நிலையில்கூட இவர்களுக்கு கல்யாணம் செய்ய முன்வந்து நிச்சயதார்த்தம் வரை போகிறார்கள்.

நிச்சயதார்த்த மண்டபத்தில் ஹீரோவின் அண்ணனும் ஹீரோயினின் அக்காவும் சந்தித்துக்கொள்ள, நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக ஒருவருக்கொருவர் மனசைப் பறி கொடுக்கிறார்கள்.

இரண்டு வீட்டாரும் இவர்கள் விஷயத்திலும் எதிர்ப்பு கிதிர்ப்பு எதுவும் காட்டவில்லை. ரெம்ப நல்லவிய்ங்க! முதலில் ஏற்பாடு செய்த நிச்சயதார்த்தத்தை தள்ளி வைத்து, புதிதாய் மனசைப் பகிர்ந்து கொண்ட ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து கடகடவென கல்யாணத்தையும் முடித்து வைக்கிறார்கள்.

திருமண பந்தத்தில் நுழைந்துவிட்ட இந்த ஜோடியால், ஹீரோவும் ஹீரோயினும் கல்யாணம் என்பதை யோசித்துக்கூட பார்க்க முடியாதபடி சிலபல சிக்கல்கள் வருகிறது. அந்த சிக்கல்களில் இருந்து காதல் ஜோடிகள் எப்படி மீள்கிறார்கள் என்பதே திரைக்கதை.

பரதன் கிராமத்துக் காதலன் வேடத்தில் பொருந்திப் போகிறார். விடலைப் பையனாய் வருகிற அவர் நண்பர்கள் சூரி, பிளாக் பாண்டியுடன் சேர்ந்து ஜாலியாய் ஊர்சுற்றித் திரிகிறார். காதலிக்கிறார். அதைத் தாண்டி பெரிதாய் வேலையில்லை.

ஹீரோவுக்கே அப்படி என்றால் ஹீரோயின் மட்டும் வெட்டி முறித்துவிடப் போகிறாரா என்ன? பப்ளி பப்பாளியாய் வருகிறார், இருக்கவே இருக்கிறது இரண்டொரு பாட்டு. அந்த பாட்டுக்கு ஆடுகிறார். கிடைக்கிற கேப்பில் முகபாவங்களால் லேசாய் நடிக்கிறார். அவ்வளவே!

கஞ்சா கறுப்பு தன்னுடைய டெய்லர் தொழிலை டெவலப் செய்ய கந்து வட்டிக்கு வாங்கும் பணத்தை அபகரித்து குடித்துக் கூத்தடிப்பது என சூரி செய்யும் அலப்பரை கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறது! படத்தில் இருக்கக்கூடிய ஆறுதலான விஷயம் இதுதான்.

படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் இரண்டு காட்சிகளில் வருகிறார். சின்னதாய் கலகலப்பூட்டி போகிறார்.

அருள்தேவ் இசையில் ஒரு ‘தீம் சாங்’, ஒரு குத்துப்பாட்டு உட்பட படத்தில் ஆறு பாடல்கள் இருந்தாலும் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் மட்டுமே லேசாய் மனதை வருடிப் போகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் நீர்நிலைகள், அடர்ந்து பரந்த பச்சைப் பசேல் செடி, கொடி, மரங்கள் என விரிகிற படத்தின் லொகேஷன்கள் கண்ணுக்கு குளிர்ச்சி!

மந்த கதியில் நகரும் காட்சிகளுக்குத் தடா போட்டிருந்தால், கதையை இன்னும் சற்றே செதுக்கியிருந்தால் ‘காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்’ என்றிருக்கிற படம் திரும்பத் திரும்ப பாக்கணும் போல இருந்திருக்கும்!

Leave a Response