அரசுப்பள்ளியில் தன் மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

lalitha
அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தன் ஒரே மகளை சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன் அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் தற்போது ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவர் பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். தற்போது கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவர் பெயர் லலிதா இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்துள்ளார்.

பொதுவாகவே நம் நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாகும். அவர்கள் நன்றாக படித்து பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகளில் சேர்ப்பார்கள்.

ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி உதித்தது? என்பது குறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.

எனது கணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.

தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response