சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

PVR Grand Galada
சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையை உபயோகித்து தான் தென் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு தரைவழியாக செல்ல இயலும். இந்த சாலையில் 24 மணிநேரமும் பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் என அனைத்து வாகனங்களும் சென்றவண்ணம் இருக்கும்.

இத்தகைய சாலையில், சென்னை விமான நிலையம் நேர் எதிர்புறத்தில் “கிராண்ட் கலாடா” என்ற ஒரு புதிய வணிக வளாகம் எழுந்துள்ளது. இதில் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திரையங்கிலும் 197 இருக்கைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் குறைந்தது நான்கு காட்சிகள் திரையிடப்படும். தற்போது சென்னையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பிரபல நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் ஏழு காட்சிகள் வரை திரையிடப்படுகின்றன. இந்த சூழலில் சென்னை விமான நிலையம் எதிரில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பி.வி.ஆர். திரையரங்கில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என்று இவர்களுடைய படங்கள் ரிலீஸ் ஆகினால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ரசிகர்கள் கட்டவுட் கட்டுவது, ஊர்வலம் வருவது என ஜி.எஸ்.டி சாலையை ஆக்கிரமிக்க வாய்புகள் அதிகம் உள்ளது.

பெரும்பாலான வி.ஐ.பி’கள் அதாவது முதல்வர், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் அவ்வப்போது இந்த சாலையில் வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் வரும் பாதையில், அதுவும் விமான நிலையத்திற்கு திரும்பும் இடத்தில் ஐந்து திரையரங்குகள் கொண்ட ஒரு பிரமாண்ட வணிக வளாகம் இருப்பது இந்த வி.ஐ.பி’களின் பாதுகாப்புக்கு ஒரு கேள்விக்குறியை எழுப்புகிறது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பெரிய மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் இருக்கக்கூடிய இடங்களில் திரையரங்குகள் அல்லது பெரிய மால்கள் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட அரசு துறையினர், மாநகராட்சி துறையினர், அரசு கட்டுமான கழகங்கள் உரிமம் வழங்குவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து உரிமம் வழங்குவார்கள். இப்படிப்பட்ட சுழலில் அதுவும் ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள ஒரு விமான நிலையம் எதிரில் ஒரு பிரமாண்ட வணிக வளாகத்தையும் அதும் அதில் ஐந்து திரையரங்குகள் செயல்ப்பட எப்படி விமான போக்குவரத்து துறை அமைச்சகம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தீ அணைப்பு துறையினர், காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் “ஆட்சேபனை இல்லா சான்றிதழ்(NOC” வழங்கியது என்பது ஒரு கேள்விகுறி.

அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response