மேட்டூர்அணையில் 5 நாட்களில் நீர்மட்டத்தின் அளவு நான்கு அடியாக உயர்வு…

mettur_3146887f
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.06 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 607 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 19 அடியாக இருந்தது. இதனால் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு, நாட்ராம் பாளையம், ஒகேனக்கல், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வந்தது.

5 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் பண்ணவாடி, மூலக்காடு, கீரைக்காரனூர், கூனாண்டியூர் ஆகிய பகுதிகளில் அணை தூர்வாரப்பட்டு வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் கூடுதலாக நீர்த்தேங்கும் நிலை உருவாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Response