‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ இசை வெளியீடு…

raja-6
‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் கோவை இராமச்சந்திரன் தயாரிப்பில் ‘நாளைய இயக்குனர்’ புகழ் அழகுராஜா இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் நாயகன், நாயகி, இசையமைப்பாளர் உட்பட அனைவரும் புதுமுகங்களே! சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் சாந்தனு பேசும் போது, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்ற தலைப்பு கேட்டதும் அனைவரையும் போல எனக்கும் எம்.ஜி.ஆர்தான் ஞாபகம் வந்தார். என் தந்தை இயக்கிய “அவசர போலீஸ் 100″ என்ற படத்தில் புரட்சி தலைவருடன் அவர் நடித்திருப்பார். நான் சிறு வயதில் முதன்முதலில் அந்த படத்தை பார்க்கும்போது எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்தியவர் என் தந்தைதான் என்று தவறாக எண்ணியிருந்தேன். பின்னாளில்தான் அவர் மிகப்பெரிய தலைவர் என்று புரிந்துகொண்டேன்” என்றார்.

அவரை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது ‘ஒரு படத்தை முழுவதும் முடிக்க இயக்குனர் ஒருவரால் மட்டுமே முடியாது. ஆனால் அவருக்கு மட்டும்தான் பெயர் கிடைக்கிறது. உடன் பணிபுரியும் எழுத்தாளர், துணை இயக்குனர்கள் அனைவரும் முன்னேற, பெயர் கிடைக்க வகை செய்யவேண்டும். அந்த விதத்தில் இப்படத்தின் இயக்குனர் அழகு ராஜா துணை இயக்குனர்கள் அனைவரையும் இயக்குனர் குழு என்று கௌரவப்படுத்தியிருக்கிறார்’ என்று கூறினார். அதை தொடர்ந்து இசை வெளியீட்டு நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். பின்னர் இப்படத்தின் இசை தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட படக்குழுவினர் அனைவரும் பெற்று கொண்டனர்.

Leave a Response