இனி சென்னையிலிருந்து திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்…

raiyil
சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்த பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து திருச்சி வரையிலான 334 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாலான இடங்களில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்ட நிலையில் வாலடி- திருச்சி இடையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் பணிகள் நடந்தன.

இந்த பணிகள் நிறைவடைந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் ஆய்வு செய்து ரெயில்களை இயக்க அனுமதி கொடுத்து விட்டனர்.

இரட்டை வழித்தடம் தயாராகி விட்டதால் இனி சென்னை-திருச்சி இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும். தற்போது சராசரியாக 6 மணி நேரம் ஆகிறது. இனி 4 மணி நேரத்தில் சென்று விடலாம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.

மேலும் இந்த இரட்டை வழிப்பாதை பயன்பாட்டுக்கு வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும். இது தொடர்பாக ரெயில்வே இயக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

வழக்கமாக ரெயில்கள் பயண நேரம் மாறுதல் அக்டோபர் மாதம் வெளியாகும் ரெயில்வே கால அட்டவணையில்தான் வெளியிடப்படும். ஆனால் இரட்டை வழிப்பாதை தயாராகி விட்டதால் ஒரு மாதத்திற்குள் ரெயில்களின் பயண நேர குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

வழக்கமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் இன்னொரு ரெயிலுக்கு வழிவிட்டு ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு இருக்கும். இனி அந்த மாதிரி இடையூறுகள் ஏற்படாது.

Leave a Response