ஆன்லைன் மீன் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் D.ஜெயக்குமார்…

jayakumar2
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் திட்டத்தை பட்டினப்பாக்கத்தில் இன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

மீன் விற்பனைக்காக தனி இணையதளம் www.neengal.com என்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சென்று அன்றைய தினத்தில் என்னென்ன மீன்கள் விற்பனைக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பின்னர் பின்கோடு எண்ணை டைப் செய்தால் அந்த ஏரியா ஸ்டாலில் எவ்வளவு மீன்கள் இருப்பு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

அன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ மீன் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.
fish
என்ன மீன்? எவ்வளவு தேவை? என்று ஆர்டர் கொடுத்தால் மீன் வீடு தேடி வரும். மீனுக்கு உரிய தொகையை பணமாகவும் கொடுக்கலாம். ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

குறைந்தபட்சம் ரூ.500க்கு மீன் வாங்க வேண்டும். தற்போது சென்னையில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அண்ணாநகர், நந்தனம், தேனாம்பேட்டை, சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய ஸ்டால்களை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும்.

மீன்களை மோட்டார் சைக்கிளில் பதப்படுத்தும் பெட்டியில் வைத்து பாதுகாப்பாக கொண்டு வருவார்கள். தூரத்துக்கு ஏற்ப சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை நகரம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மேலும் மீன் விற்பனை ஸ்டால்கள் திறக்கப்பட உள்ளது.

வெட்டி, சுத்தப்படுத்திய துண்டு மீன்கள், முழு மீன்கள் இரண்டும் விற்பனைக்கு உள்ளது. தேவையானதை வாங்கி கொள்ள முடியும்.

நிகழ்ச்சியில் ஜெயவர்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, இயக்குனர் பீலா ராஜேஷ், கலெக்டர் அன்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response