இனி 90 நிமிடங்கள் தாமதமாக வரும் திருச்செந்தூர் – பாலக்காடு ரயில்: ஜூன் 16 வரை…

paalakkadu
தண்டவாலங்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 16ம் தேதி வரையில் திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் ஒன்றரை மணிநேரம் (90 நிமிடங்கள்) காலதாமதமாக வரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் பாலக்காடு டவுன் இடையே தினசரி இருமார்க்கத்திலும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும். இதேபோல் திருச்செந்தூரில் இருந்து மேற்கண்ட நிலையங்களில் நின்று செல்லும்.

விருதுநகர் சாத்தூர் இடையே தண்டவாள பகுதியில் தற்போது தினசரி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மார்க்கத்தில் மதியவேளையில் வரும் ஒரேயொரு பயணிகள் ரயிலான திருச்செந்தூர் பாலக்காடு டவுன் ரயிலை காலதாமதமாக இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி திருச்செந்தூரிலிருந்து (வண்டி எண் 55770) தினசரி காலை 10 மணிக்கு பதில் 11.30 மணிக்கு ரயில் கிளம்பும்.

தற்போது தினசரி மாலை 3.30க்கு திருமங்கலம் வரும் இந்த ரயில் இனிமேல் ஒன்றைரை மணிநேரம் அதாவது 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 5 மணிக்கு வரும் எனவும் மாலை 6 மணிக்கு மதுரையை அடைந்து பாலக்காடு டவுனுக்கு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 16ம் தேதி வரையில் இந்தநிலை நீடிக்கும். அதேநேரத்தில் வியாழக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் வழக்கமான நேரத்தில் திருச்செந்தூர் பாலக்காடு இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சை வழியாக மயிலாடுததுறை செல்லும் பயணிகள் ரயில் இன்றும், நாளையும் நெல்லை திருச்சி வரையில் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மயிலாடுதுறை மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 2 நாட்களுக்கு மட்டும் நெல்லை திருச்சி இடையே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response