கோயில் காளைக்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்: ஜோலார்ப்பேட்டை ….

jolaar1
ஜோலார்பேட்டை அருகே கோயில் காளைக்கு கிராம மக்கள் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிகுப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பெருமாள் சிலைக்கு தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது வேண்டுதலின் பேரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கன்றுக்குட்டி ஒன்றை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கினார்.

இந்த காளையை அக்கிராம மக்கள் கோனேரிக்குப்பம் பெருமாள் என பெயர் வைத்து பெருமாளின் ரூபமாகவே நினைத்து வணங்கி வந்தனர். மேலும், இந்த காளை கிராமத்தில் யாருடைய வயலில் இறங்கி மேய்ந்தாலும் அதனை யாரும் விரட்டுவதில்லை. தினமும் ஊரில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக மேயும் இந்த காளை இரவில் கோயில் வளாகத்தில் வந்து தூங்குமாம். இந்த காளையை மாவட்டத்தின் பல்வேறு கோயில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்வது வழக்கம்.

மேலும், கோனேரிக்குப்பம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள 7 கிராமங்களிலும் காளை விடும் திருவிழா நடந்தால் இந்த காளை முதலில் ஓட விடப்படும். இந்நிலையில் இந்த காளை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்கு அக்கிராம மக்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காளை நேற்று இறந்தது. இதுகுறித்து அறிந்த 7 கிராம மக்களும் திரண்டு ஒப்பாரி வைத்து, மனிதர்கள் இறந்தால் செய்வது போன்று ஈமச் சடங்குகளை செய்தனர். கோயில் காளை இறந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response