அடுத்த வாரம் திருமங்கலம்- நேரு பூங்கா சுரங்கப் பாதை மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது!…

thirumangalam
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் உயர்மட்ட பாதையாகவும், சுரங்கப் பாதையாகவும் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவேற்றப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சுரங்கப்பாதையாகவும், உயர்மட்ட பாதையாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

முதன் முதலாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. அதனை தொடர்ந்து சின்ன மலை -சென்னை விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையில் அடுத்த கட்டமாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

8 கி.மீ. தூரமுள்ள இந்த பாதையில் ரெயில் நிலையங்கள், தண்டவாளம் அமைக்கும் பணி மின்சாரம், கம்பி அமைக்கும் பணிகள் அனைத்தும் முழுமை அடைந்து விட்டன.

5 ஆண்டுகளாக நடந்து வந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரெயில் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.

ஒரு சில நாட்களில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் சுரங்கப் பாதையில் பாதுகாப்பு குறித்து சோதனை நடத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் இறுதியில் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையத்திடம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க சிறப்பு அனுமதி பெறப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாவது:-

திருமங்கலம் – நேரு பூங்கா இடையேயான சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு சில நாட்களில் பாதுகாப்பு கமி‌ஷனரின் ஆய்வு நடத்தப்படும். சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கலாம் என்று பாதுகாப்பு கமி‌ஷனர் சான்று அளித்தபின் அடுத்த வாரம் இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும்.

இந்த பாதையில் பாதுகாப்பு குறித்த பல்வேறு ஏஜென்சிகளிடம் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால் சென்னை மாவட்டத்தில் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து விதி விலக்கு பெறப்பட்டு அடுத்த வாரம் மாநில அரசின் ஒப்புதலோடு சேவை தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மெட்ரோ ரெயில் கட்டணம் தற்போது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. சுரங்கப் பாதையில் இக்கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.60 ஆக நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Response