‘பேரவையில் முதலிடம் நமக்குத்தான்’: திமுக செயல் தலைவர் ஸ்டாலின்…

stalin.1
எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தாலும், மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் நமக்குத்தான் என்று குறிப்பிட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் திமுக உறுப்பினர்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.வழக்கமாக ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறக்கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்குள்ளாக முடித்துவிட்டு, மொத்தக் கவனத்தையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள் என தனது மடலில் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மட்டும் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இரண்டு லட்சம் கோடிக்கும் மேலான நேரடி கடன் சுமை ஏறி, தற்போது தமிழக அரசின் கடன்தொகை என்பது 3.14 லட்சம் கோடி ரூபாய் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு தமிழரின் தலையிலும் 36 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் சுமத்தப்பட்டு தலை குனிந்து நிற்க வேண்டிய நிலையைத்தான் அதிமுக அரசு உருவாக்கி இருக்கிறது என ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.

நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் மிகக் குறுகிய கால அளவிலேயே நடைபெற்றிருந்தாலும், சட்டமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து கழகம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தாலும், மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் நமக்குத்தான். எண்ணிக் கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது. சட்டமன்றத்தைப் போலவே மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். இடைத்தேர்தல் களம் நமது தொடர் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமையப் பணியாற்றுவோம் என்றும் தனது மடலில் ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார்..

Leave a Response