சசிகலாவிற்கு தொப்பி சின்னம், ஓ.பி.எஸ்க்கு மின்கம்பம் சின்னம்!

shashikala-panneerselvam
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் சசிகலா, ஓ.பி.எஸ் அணியினருக்கு கட்சி பெயர், சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, காலியான ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால், தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் தலா 3 சின்னங்கள் மற்றும் 3 கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். அதிலிருந்து சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னமும், ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை மின்கம்பமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு கட்சியின் பெயர் ”அதிமுக அம்மா” என்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓ.பி.எஸ் தரப்பு கட்சியின் பெயர் ”அதிமுக புரட்சி தலைவி அம்மா” என்றும் அளிக்கப்பட்டுள்ளது

Leave a Response