3 ஏரிகளை சுத்தம் செய்த 29 வயது இளைஞர்!

Tamil_Newsபெங்களூருவில் தனி ஒருவனாக 3 ஏரிகளை சுத்தம் செய்துள்ள 29 வயது இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் ஹிமாஷவ் அர்தீவ் (29). இவரின் பயோமி என்விரான்மன்டல் டிரஸ்ட் (Biome Environmental Trust) தான் ஏரிகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இவர், இயற்கையை பயன்படுத்தி ஏரி நீரை சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி கட்டுரை ஒன்றை படித்துள்ளார். இந்த முறை கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிவிசி பைப்களை பயன்படுத்தி மிதவை போன்ற அமைப்பை அர்தீவ் அமைத்துள்ளார். அதில் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட நைட்ரேட்கள், பாஸ்பேட்கள் மற்றும் சல்பேட்கள் அடங்கிய கலவையை இட்டுள்ளார். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மிதவையை 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் புட்டஹள்ளி ஏரியில் மிதக்க விட்டுள்ளார்.

இதனால் ஏரியின் நீர் தூய்மை அடைந்துள்ளது. இதே முறையை பயன்படுத்தி கைகொண்டஹள்ளி ஏரி மற்றும் ஜக்கூர் ஏரி ஆகியவற்றையும் அர்தீவ் தூய்மைப்படுத்தி உள்ளார்.
ஒரு குறிப்பிட்ட மாத இடைவெளியில் இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்து, ஏரியை சுத்தம்செய்து, ஏரி நீரை பயன்பாட்டுக்குரியதாக மாற்றி உள்ளார். இந்த மிதவையை தயார் செய்ய இவருக்கு ஆன செலவு அதிகமில்லை, வெறும் ரூ.3000 மட்டுமே. தனது டிரஸ்ட் மூலம் அருகில் உள்ள ஏரிகளையும் சுத்தம் செய்ய அர்தீவ் திட்டமிட்டுள்ளார். குறைந்த செலவில், எளிமையாக ஏரியை சுத்தம் செய்து வரும் அர்தீவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Response