மத்திய அரசின் ஆணை வரவேற்கத்தக்கது -பாமக அன்புமணி..

Anbumani
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
‘2017-18ஆம் ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழலை தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கட்டணக் கொள்ளையையும் தடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தபட்டன.
இந்தத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருந்தது.

மருத்துவப் படிப்பில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நடத்துவதால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது தடுக்கப்பட்டு விடும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு வசதியாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பாமக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Leave a Response