குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் தொடரும் அவலநிலை!!!..

water-treatment-plant2
பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதின் காரணமாக சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும் அவல நிலை அங்கு உருவாகிஉள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம், குமாரபாளையத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், அதை பயன்படுத்தும் மக்களும் பல்வேறு சரும பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். தவிர, மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களும் செத்து மடியும் நிலையும் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பலனாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் ரூ.700 கோடி மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு, சேலம் மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், திட்டம் அறிவித்து 3 ஆண்டுகளானபோதும், அத்திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. அதனால், மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பது தொடர் கதையாக உள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று “குமாரபாளையம்,பள்ளிபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது”, என்று நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். எனினும் மக்களின் இந்த அவலநிலை மாறுமா? இவர்களது குறைகள் தீர்க்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது… 

Leave a Response