பாகிஸ்தானால் மறைக்கப்பட்ட போர் உண்மைகளை, சொல்லும் படம் ‘காஸி’ : விமர்சனம்:

Ghazi Review
பி.வி.பி சினிமாஸ் தயாரிப்பில் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் திரைப்படம் ‘காஸி’. இப்படத்தில் ராணா, அதுல் குல்கர்னி, கே.கே.மேனன், டாப்ஸீ, நாசர் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.

1971ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இடம்பெற்ற இரு நாட்டினரின் நீர்முழ்கி கப்பல்களை பற்றிய கதை தான் இந்த ‘காஸி.

முன்பு குறிப்பிட்டுள்ள போரில் இடம்பெற்ற பாகிஸ்தான் நீர்முழ்கி கப்பலின் பெயர் தான் இந்த ‘காஸி’. அந்த போரில் பாகிஸ்தானின் நீர்முழ்கி கப்பல் ‘காஸி’ எந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதரிவிட்டதாக பாகிஸ்தான் வரலாறு சொல்கிறது.

இப்படம் சுமார் 95% காட்சிகள் நீர்முழ்கி கப்பல் காட்சிகளாகவே அமைந்துள்ளது. இருப்பினும் எந்த வகையிலும் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் கதை தத்ரூபமாக நகர்கிறது.

இந்திய கப்பல் படை அதிகாரிகளுக்கு, பாகிஸ்தான் நீர்முழ்கி கப்பல் ஒன்று இந்தியாவை நோக்கி வருவதாக தகவல் கிடைக்கிறது. அதன் காரணமாக கப்பல் படை அதிகாரியாக வரும் நாசரும் மற்றும் சில அதிகாரிகளும் பாகிஸ்தான் நீர்முழ்கி கப்பல் இந்தியாவை நோக்கி வருகிறாதா என்பதை அறிய ஒரு நீர்முழ்கி கப்பல் ஒன்றை கே.கே.மேனன் தலைமையில் அனுப்பிவைகிறது. அந்த பயணத்தில் ரானா மற்றும் அதுல் குல்கர்னி இடம் பெறுகிறார்கள்.

அந்த பயணத்தின் போது நடுகடலில் ஒரு கப்பல் தீயினால் எரிந்து கொண்டிருக்கிறது. அதை அறிந்த ரானா பயணிகளை காப்பாற்ற செல்கிறார். அப்போது டாப்சி மற்றும் ஒரு குழந்தை சிக்கி தவிப்பதை கண்டு காப்பாற்றி தான் பயணித்த இந்திய நீர்முழ்கி கப்பலுக்கு அழைத்து வருகிறார். இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நடக்க, பாகிஸ்தான் நீர்முழ்கி கப்பல் இந்தியாவிலுள்ள விசாகப்பட்டின துறைமுகத்தை எவ்வாறு அழிப்பது என திட்டம் தீட்டி வருகிறது. இந்திய நீர்முழ்கி கப்பல் படை அவர்களுடைய திட்டங்களை கணித்து அதிலிருந்து சிக்காமல் தப்பித்து வருகிறது.

பின்னர் இந்திய நீர்முழ்கி கப்பல் தப்பிக்கிறதா அல்லது எதிரியின் அந்த ‘காஸி’ நீர்முழ்கி கப்பலை வீழ்துகிறதா என்பது தான் க்ளைமாக்ஸ்.

இந்திய நீர்முழ்கி கப்பல் காப்டனாக வரும் கே.கே.மேனனின் நடிப்பு அபாரம். அவர் நடிப்பில் ஒரு காப்டனுக்கான கர்வம் சற்றும் குறையாமல் உடல்பாவனம் மாறாமல் அற்புதமாக நடித்துள்ளார். அதுல் குல்கர்னி எப்போது போல் அவருடைய கதாபாத்திரத்தை குறையின்றி நடிப்பில் வெளிபடுத்தியுள்ளார். ரானா, படத்தின் இரண்டாவது பகுதியை நடிப்பில் முழுவதுமாக கைப்பற்றுகிறார். டாப்சி நடிப்பில் பெரியதாக குறிப்பிடும்படி எந்த காட்சிகளும் இல்லை. அவருடைய காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால், ஒரு சில இடங்களில் குறையும் விறுவிறுப்பு தடுக்கப்பட்டிருக்கும்.

இயக்குனர் சங்கல்ப் முன்பு அவர் எழுதிய “ப்ளு ஷிப்” என்ற புத்தகத்தின் தழுவலை கொண்டு இந்த படத்தினை எடுத்துள்ளார். படத்தின் திரைகதை அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்திலுள்ள காட்சிகள் பார்வையாளர்களின் கண்களை ஈர்க்கும் வகையில் ஒளிப்பதிவாளர் மதி, மிக தத்ரூபமாக காட்சிகளை பதிவிட்டுள்ளார். பார்வையாளர்களை சலிக்காத விதத்தில் கச்சிதமாக படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். இசையமைப்பாளர் கே’வின் பின்னணி இசை கதை, வசனங்கள், காட்சிகளோடு ஒற்றுமையாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாம் அந்நிய நாடு படங்களை மட்டுமே பிரமாண்டம் என்று சொல்லிவந்தோம். சமீபத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தை பாராட்டினோம். அந்த வகையில் ‘காஸி’ திரைப்படத்தையும் அந்நிய நாட்டு சிறந்த படங்களோடு தயக்கமின்றி ஒப்பிட்டு பேசலாம்.

‘காஸி’ என்ற கடல் வழி போர் பற்றிய இந்திய வரலாற்று திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு நல்ல திரைப்படம்.

Leave a Response