கபாலி திரைவிமர்சனம்:

KABALI REVIEW
கபாலி திரைப்படம், சொந்த நாட்டை விட்டு, அயல் நாட்டில் சிறுபான்மையினராக குடிபெயர்ந்த மக்களை பற்றிய படம். இது தமிழர்களுக்கு மட்டும் அல்ல உலக நாடுகளில் உள்ள எல்லா சிறுபான்மை இனங்களும் அனுபவிக்கும் துயரங்களும், துன்பங்களும் ஒன்று தான். அந்த சிறுபான்மை மக்கள், கடைசி வரை சிறுபான்மையினராகவும், சிலருக்கு கீழ் அடிமைகளாகவும் இருக்க விரும்புவதில்லை. என்றாவது ஒரு நாள், அவர்கள் வீரியமிக்கவர்களாக மாறி போராட்டத்தில் குதிக்கின்றனர். ஒவ்வொரு நாடுகளிலிலும், இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் மலேசியாவில் உள்ள தமிழர்களின் மனநிலையை பற்றியான படம். அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பாடுபடுபவர் தான் இந்த கபாலி. கபாலிக்கு முன்னரே தமிழ் நேசன் என்பவர் இந்த போராட்டத்திற்கான விதையை தூவுகின்றார். துரோகிகளால் அந்த தமிழ் நேசன் கொல்லப்படுகிறார். தமிழ் நேசன் இடத்திற்கு அவருடைய மகனை புறம்தள்ளிவிட்டு விட்டு கபாலி வந்து அமர்கின்றார். மீண்டும் தமிழ்நேசன் மகனே துரோகியாக மாறி கபாலியை குடும்பத்துடன் கொலை செய்ய முயல்கின்றார். ஆனால் கபாலி அவரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்கின்றார். சிறையில் இருந்து வெளிவந்து, தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்தினாரா? என்பது தான் மீதி கதை.

பா.ரஞ்சித், ரஜினியை மாறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளார். கபாலி படம் ரஜினி படம் அல்ல. இது ரஞ்சித் படம் என அனைவரும் சொல்லும் அளவிற்கு, படத்தில் ரஞ்சித்தின் ஆதிக்கத்தை முழுமையாக காண முடிகின்றது. ரஞ்சித் தனக்கே உரிய பாணியில் படத்தை இயக்கி உள்ளார். படத்தில் முதல் 15 நிமிடம் மட்டுமே, ரஜினியின் மாஸ் உள்ளது. அதன் பிறகு கிளைமேக்ஸ் காட்சி வரைக்கும் ரஞ்சித்தின் மாஸ் தான் உள்ளது.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எல்லோரும் கதைக்கு தேவையா? என எண்ணுவதற்குள் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொள்வது போல, சின்ன சின்ன காட்சியில் தோன்றி மறைகின்றனர். ஒருவேளை புதுமுகங்களை அந்த கதாப்பாத்திரங்களுக்கு தேர்வு செய்திருந்தால், யார்? எங்கு வருகின்றனர்? என தெரியாமலே, படத்தை இரண்டு, மூன்று முறை பார்க்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டு இருப்பார்கள்.

படத்தில் ரஜினி என்கின்ற ஒரு மனிதர் இல்லையென்றால், இந்த படமே இல்லை. முள்ளும் மலரும் ரஜினியை பார்த்த பீல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் மாஸ் காட்சியே இல்லாத ரஜினியாக காட்டியிருக்கலாம். ரஜினி ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே’வின் ஒரு அழுகை காட்சி மட்டுமே பொது அவர் ஓர் சிறந்த நடிகர் என்பதற்கு. தன்ஷிகா எடுத்து கொண்டிருக்கும் கேங்ஸ்டெர் கதாபாத்திரம் மிக அழகாக பொருந்தியுள்ளது. தன்ஷிகாவும் கதைக்கு தேவையான அளவு நடிப்பும் ஆக்ஷனிலும் பின்னியுள்ளார். ரஞ்சித் மற்றும் ரித்விக்கா கதாபாத்திரம் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் தினேஷ், ரஞ்சித், ரித்விகா, டைகர் என அனைவரும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், குறை சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. கிஷோர், மைம் கோபி, நாசர், ஜான் விஜய், வின்ஸ்டன் சாவ் தங்களுடைய கதாபாத்திரங்களில் குறையின்றி நடித்துள்ளனர்.

சின்ன சின்ன விசயத்தில் கூட, பார்த்து பார்த்து செதுக்கிய ரஞ்சித், படத்தின் கதையை செதுக்குவதில் கோட்டை விட்டுள்ளார். மலேசியாவில் நடக்கும் ஒரு கதையை, தமிழகத்தில் உள்ளவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும். இங்கு உள்ள 80 சதவீதம் பேருக்கு மலேசிய வரலாறே தெரியாது. இங்கு இருக்கும் தமிழர் அங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது மட்டுமே தெரியும். ரஜினி மக்களுக்காக போராடும் காட்சியில், மக்களுக்கு அப்படி என்ன அநீதி நடந்து விட்டது. ரஜினி ஏன்? இவ்வளவு தீவிரமாக போராட வேண்டும். என்பதற்கான அழுத்தமான காட்சிகள் படத்தில் இல்லை. எனவே ரஞ்சித் கதை சொல்ல வந்த நோக்கம், ஜாதி ரீதியான பார்வையை உண்டு செய்து விட்டது.

கபாலி படத்தை முதல் இரண்டு நாள் கழுவி கழுவி ஊற்றாதவர்களே இல்லை. காரணம், படத்தின் ட்ரைலர் ரஜினியை மாஸாக காட்டி, இது ஒரு மாஸ் ஹீரோ படம் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டனர். எனவே திரையில் ரஜினியை சாதாரணமான கதாபாத்திரத்தில் பார்த்தவுடன், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், 1000, 2000 ரூபாய் என டிக்கெட் வாங்கியவர்கள் சும்மாவா இருப்பார்கள்? படத்தை பற்றி நெகடிவ் கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.

இதுவே, முதல் காட்சியில், ரஞ்சித் படத்தை ரசிப்பவர்கள் பார்த்திருந்தால் படம் பற்றி பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்திருக்கும். ஐ.டி. கம்பெனிகளை மிரட்டி 500 டிக்கெட்கள், 1000 டிக்கெட்கள் என வாங்க வைத்ததன் விளைவு, வழக்கமாக சினிமா பார்பவர்களுக்கு கிடைக்கவில்லை. மிரட்டி டிக்கெட் வாங்க வைத்த ஐ.டி. ஊழியர்களின் குமுறல் தான், படத்தை கழுவி ஊற்றுவதில் வெளிப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கபாலி எப்போதும் விற்கப்படும் டிக்கட் விலைக்கு வர்த்! 500 ரூபாயோ அல்லது அதற்கு அதிகமோ டிக்கட் விலை என்றால் மக்கள் கண்டிப்பாக யோச்ப்பார்கள்!! டிக்கட் விலையை குறைத்தால் ரசிகர்களும் சரி, பொது மக்களும் சரி “கபாலி” திரைப்படத்தை திருட்டு VCD’லோ இண்டேர்நெட்டிலோ பார்க்காமல் திரையரங்கு சென்று பார்ப்பது உறுதி.

Leave a Response