அ.இ.அ.தி.மு.க அடுத்த மாற்ற பட்டியலில் இவர்களா ..?

jayalalithaa
மதுரை தெற்கு தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க தலைமை, எஸ்.எஸ்.சரவணன் எனும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இத் தொகுதியில் பெரு வாரியாக உள்ளவர்கள் தேவர் இனத்தை சார்ந்தவர்களே. ஆனால், சௌராஷ்டிரா இனம் சார்ந்த இவர், இங்கு நிறுத்தப்பட்டுள்ளது அவர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாம். அதுமட்டுமின்றி, இவர் தே.மு.தி.க’வில் இருந்து சமீபத்தில்தான் அ.இ.அ.தி.மு.க வந்துள்ளார் என்பதும் அத் தொகுதி அ.இ.அ.தி.மு.க’வினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதாம்! இந்த விஷயம் தற்போது தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொது செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே மாதிரி, மதுரை மத்திய தொகுதி ஜெயபால் எனும் கட்சிக்காரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கவுன்சிலர் எலக் ஷனில் இவர், இக்கட்சி சார்பில் நின்று தோற்று கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அது மட்டுமின்றி, 1996-ல் செல்வி.ஜெயலலிதா மீது அப்போதைய தி.மு.க அரசு வழக்கு போட்டிருந்த சமயத்தில், இந்த ஜெயபால், ராஜன் செல்லப்பாவுடன் கட்சியை உடைத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு மட்டுமல்லாமல், இந்த ஜெயபால் மதுரை தி.மு.க புள்ளியினருடன் வியாபாரத் தொடர்புடையவர். இவர் மீது கட்சிக்காரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மதுரை மாவட்ட அ.இ.அ.தி.மு.க சொல்கின்றன!

இவர்கள் எல்லாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டக் காரணம், மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜின் கைங்கர்யம்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். காரணம், தன் கை மீறாதவர்களே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என திட்டம் போட்டு காய் நகர்த்தியுள்ளாராம் செல்லூரார். இந்த உண்மை ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதால், அடுத்த வேட்பாளர் மாற்றப் பட்டியலில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பிடிக்கலாம் எனத நம்பகத்தகுந்த அ.இ.அ.தி.மு.க வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response