“பிச்சைக்காரன்”, வசூலில் பணக்காரன் – திரைப்பட விமர்சனம்:

Pichaikaran Review
நடிகர்கள்: கதாநாயகன் அருள் செல்வகுமாராக விஜய் ஆண்டனி, கதாநாயகி மகியாக சத்னா டைட்டஸ், நாயகன் அருளின் பெரியப்பாவாக முத்துராமன், அருளின் தாயாக தீபா, பகவதி பெருமாள், இயக்குனர் மூர்த்தி மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம்: சசி, இசை: விஜய் ஆண்டனி, படத்தொகுப்பு: வீரா செந்தில் ராஜ், ஒளிப்பதிவு: பிரசன்னகுமார், சண்டைபயிற்சி: சக்தி சரவணன், தயாரிப்பு: விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன். சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி. KR பிலிம்ஸ் மற்றும் ஸ்கைலார்க் பிலிம்ஸ் படத்தை வெளியிட்டுள்ளனர்.

“பிச்சைக்காரன்”- வசூலில் பணக்காரன். இது உறுதி… ஒரு கட்டுரையை, ஒருவரின் அனுபவத்தை நாம் படித்தால், “ச்ச்”- கொட்டுவோம். சில மணி நேரங்கள் அதை நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இயக்குனர் சசி, ஒரு வித்தியாசமான உண்மை சம்பவம் ஒன்றை படித்துவிட்டு அந்த நிஜத்துடன் கற்பனையாக(அதிலும் சமூக அக்கறையாக) கதையை இணைத்து சிறந்த படத்தை தந்துள்ளார். தயாரிப்பாளராக விஜய்ஆண்டனி நல்ல படத்தை வழங்கியுள்ளார். கதாநாயகனாகவும் அருமையாக நடித்துள்ளார். கதாநாயகி(மகி’யாக) சேத்னா டைடஸ் சிறந்த தேர்வு(காதல் சந்தியா ஜாடை- ப்ளஸ்பாயின்ட்)

அம்மா திடீரென கோமா நிலைக்கு போக, கோடிகள் இருந்தும் காப்பாற்ற இயலாமல் ஒரு ஞானி கூறிய விரதம் ஒன்றை 48- நாட்கள் கடைபிடித்து வரும் ஹீரோ சந்திக்கும் பிரச்சனைகளே “பிச்சைக்காரன்” பட கதையின் கரு.

திரைக்கதையில் கவனமாக பயணித்து கலகலப்பாகவும், கைகளை தட்டி ரசிக்கும்படியும் இயக்கிய டைரக்டருக்கு மீண்டும் பாராட்டுக்கள். நடித்த அனைவரும் இயல்பாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார்கள். கோபமும், வீரமும் சரியாக ஆக்‌ஷன் காட்சிகளில் பொறி பறக்கின்றன. பாடல்கள் குறைவு என்றாலும் நிறைவாக உள்ளன். குறிப்பாக எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஏக்நாத்ராஜ் எழுதியுள்ள “அம்மா” பாடல் அருமை.

ஒரு காட்சியில், FM ரேடியோவில் நேயராக போன்போட்டு பேசும் பிச்சைக்கார கேரக்டர்(இயக்குனர் மூர்த்தி), 500-1000 ரூபாய் நோட்டுகளை குறித்து தரும் விளக்கம் “இந்தியா நிதி- நீதி”- விஷயத்தை புட்டு புட்டு வைக்கிறது. கைதட்டல் ஒலியினால் ரீப்ளே செய்யவேண்டும். படம் முடியும் போது, இத்தனை நாளா பிச்சைக்காரனா இருந்தப்போ ஏற்படாத அருவருப்பு, உங்க கை பட்டதும் ஏற்படுகிறது என்று ஒரு போலீஸ்காரரை பார்த்து ஹீரோ கூறுவது பிரமாதம். பிச்சைகார கதாபாத்திரத்தில் வரும் ஒருவர், “நடிகர்கள் எல்லாம் முதல் சில படங்களில் சுமாராக இருப்பார்கள், பின்னர் ஆள் அழகாகிவிடுவார்கள். அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள், நம்முடைய மனநிலை தான் அவர்களை பார்த்து பழகிவிடுகிறது.” என்பதை போல் ஒரு வசனம் இடம்பெறும். அந்த வசனத்திற்கு திரையரங்கமே கைதட்டலில் மிதக்கிறது. இத்தகைய கருத்துள்ள வசனங்கள் படத்தில் அவ்வப்போது வந்து ரசிகர்களின் பாராட்டுகளை பெறுகிறது “பிச்சைக்காரன்” பட குழு.

மொத்தத்தில் அனைவரும் ஒரு வகையில் “பிச்சைக்காரன்” தான் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர் சசி. அனைவரும் பார்க்கக்கூடிய படம் தான் விஜய் ஆண்டனி சத்னா டைட்டஸ் இனைந்து நடித்திருக்கும் “பிச்சைக்காரன்”.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response