இணையதளத்தில் மற்றும் திருட்டு DVD’ல் வெளியான “மாப்பிள்ளை சிங்கம்”! அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

Mappillai Singam Pirated Online
அறிமுக இயக்குநர் என்.ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் மாப்பிள்ளை சிங்கம்.  இப்படம் இம்மாதம் 11’ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தணிக்கைக்குழுவிற்கு அனுப்பிய மாப்பிள்ளை சிங்கத்தின் பிரிண்ட் இணையதளத்தில் மற்றும் DVD’ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைக் குழுவிற்கு அனுப்பும் பிரதியில் இருக்கும் டைமர் மற்றும் ஹாலாகிராம் எல்லாம் அப்படியே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் மாப்பிள்ளை சிங்கம் படக்குழுவினரை அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.  இந்த விவரம் அறிந்த திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் “மாப்பிள்ளை சிங்கம்” படம் வெளியிட தயக்கம் காட்டியுள்ளனர்.  பின்னர் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தினர், தாங்களே சொந்தமாக வெளியிட முன் வந்ததினால், சில திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.  இருப்பினும் வெளிநாடுகளிலும், இந்தியாவில் சில இடங்களிலும் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ள NRI பிரமுகர்கள், இணையத்தில் மற்றும் திருட்டு DVD’ல் வெளியாகியுள்ள விஷயம் அறிந்து தாங்கள் வெளியிட விருமபிள்ளை என்று தெரிவித்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப கேட்டுள்ளதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு தான், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இரு முறை வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.  அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சில தஸ்தாவேஜுக்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த சூழலில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் படம் வெளியிட முன் வந்தாலும், இணையதளத்திலும் திருட்டு DVD’ல் படம் வெளியாகியுள்ளதால் கண்டிப்பாக வியாபாரம் பாதிக்கும் என்பதே பல சினிமா வியாபாரிகளின் கணிப்பு.

இதற்கு முன் சரத்குமார் நடித்த “ஜக்குபாய்” திரைப்படமும் இதே போல் இணையதளத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். மேலும் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற “பிரேமம்” படத்தின் சென்சார் பிரதியும் இதே போல் திருட்டு வீடியோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

சென்சாருக்கு கொடுக்கப்படும் பிரதி இவ்வாறு திருட்டுத்தனமாக வெளிவந்தால், கோடிக்கணக்கில் வட்டிக்கு பணம் வாங்கி சினிமா தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதை இரவு பகலாக கஷ்டப்பட்டு இயக்கிய இயக்குனர் நிலை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. சென்சார் அலுவலகங்களில் இனியாவது பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா? சென்சார் அலுவலகத்தில் இத்தகைய தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா??

திரையரங்குகள் அதிக விலையில் டிக்கட்டுகளை விற்பதை தவிர்த்து கொள்வதும், பொதுமக்கள் இணையதளத்திலும், திருட்டு DVDகளிலும் திரைப்படங்களை பார்க்காமல் தவிர்த்துக் கொண்டாலும் திரையுலகம் நீடூழி வாழும்.

“மாப்பிளை சிங்கம்” மாப்பிள்ளையாகவும், சிங்கமாகவும் இருந்தால் சரி!

Leave a Response