“உளவுத்துறை”, தலைவா, வஜ்ரம்” ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழ்த் திரையுலகிற்கு கேடு விளைவிப்பது இந்த திருட்டு வி.சி.டி தான். அவர் குழுவினர் ஆய்வு செய்தமையில் திருட்டு வி.சி.டி’யில் திரைப்படங்களை அதிக அளவில் பார்ப்பது மாணவர்கள் தான் என்றார். எனிவே, மாணவர்கள் திருட்டு வி.சி.டி’யில் படம் பார்ப்பதை திசை திருப்ப “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” என்னும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அந்த சொசைட்டியில் இதுவரை பலர் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றும், அவர்களுடைய இலக்கு ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை என்றும் தெரிவித்தார் ரமேஷ் செல்வன்.
இந்த சொசைட்டியில் உறுப்பினராகும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதிய படங்கள் காண்பிக்கப்படும். இப்படி இந்த மாணவர்களுக்கு திரையரங்கில் படம் காண்பிப்பதனால், திருட்டு வி.சி.டி’யில் படம் பார்க்கும் நோக்கம் உள்ள மாணவர்களின் திசை நியாமான முறையில் திரையரங்கில் பார்க்க வழி வகுக்கும் என கூறினார் ரமேஷ் செல்வன். இந்த மாணவர்களுக்கு குறும்படம் இயக்கம் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் முதல் 27 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய குறும்படங்களை இந்த மாணவர்கள் இயக்கலாம் என்றார். அதில் தேர்ந்தெடுக்கப்படும் 100 குரும்படங்கள் “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” நடத்தும் குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் என்றார். அந்த 100 படங்களில் சிறந்த 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு பரிசு வழங்கப்படும் என்றார் இயக்குனர் ரமேஷ் செல்வன். மேலும் தேர்வு செயப்பட்ட அந்த 10 படங்கள் மாநில, மத்திய சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விருது போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு “ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ்” நிருனத்தால் திரைப்படம் இயக்கம் வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார் ரமேஷ் செல்வன்.
இந்த திருவிழாவில் திரைப்பட கல்லுரி இயக்குனர்கள் R.அரவிந்தராஜ், R.S.இளவரசன், J.பன்னீர், N.நாகராஜ், நந்தகுமார், R.P.ரவி, கட்டபொம்மன், ரவிநிவேதன், பாண்டிசெல்வம் ஆகியோரும், ஒளிப்பதிவாளர்கள் N.ராகவ், சேவிலோராஜா, சந்திரன் ஆகியோரும் தயாரிப்பாளர்கள் P.சித்திரை செல்வன், T.R.ரவிச்சந்திரன், R.சங்கர், K.சிவசங்கர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என ரமேஷ் செல்வன் தெரிவித்தார். இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான N.K.விஸ்வநாதன், கவிஞர் சிநேகன் மற்றும் சில பிரபல சினிமா வல்லுனர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் இந்த குறும்பட தேர்வு கமிட்டியில் ஜுரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் செல்வன் தெரிவித்தார்.
அவருடைய உரையாடலின் இறுதியில் தெரிவித்தது, மாணவர்களுக்கான இந்த குறும்பட விழா மற்றும் புதியதாக தொடங்கப்பட்டுள்ள “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” மூலம் திருட்டு வி.சி.டி நடமாட்டம் குறையும் என்றார். அது மட்டுமின்றி திரையரங்குக்கு வரும் திரைப்படங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான N.K.விஸ்வநாதன், இயக்குனர் அரவிந்தராஜ், கவிஞர் சிநேகன் ஆகியோர் ரமேஷ் செல்வன் உடனிருந்தனர்.
ரமேஷ் செல்வனின் இந்த புதிய முயற்சி திருட்டு வி.சி.டி நடமாட்டத்தை குறைக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.