நடிகர் சந்தானம் மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மறைந்த ராம. நாராயணன் இனைந்து தயாரித்த தமிழ் திரைப்படம் “கண்ணா லட்டு தின்ன ஆசையா”. இந்த படம் 2013’ம் ஆண்டு உலகெங்கும் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு, இப்படம் பாக்யராஜ் அவர்கள் எழுதி, இயக்கி மற்றும் நடித்த “இன்று போய் நாளை வா” என்னும் படத்தின் தழுவல் தான் இந்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்று சொல்லப்பட்டது. பின்னர் இந்த விஷயம் அறிந்த நடிகர் பாக்யராஜ், நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை பற்றி பாக்யராஜ், எழுத்தாளர்கள் பலரிடம் முறையிட்டுள்ளார். இது சம்மந்தமாக எழுத்தாளர் கலைஞானம் அவர்களையும் பாக்யராஜ் செந்தித்து பேசியுள்ளார். பின்னர் கலைஞானம் அவர்கள் பாக்யராஜை, “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் ஒரு தயாரிப்பாளரான ராம.நாராயணனிடம் அழைத்து சென்று விஷயத்தை சொல்லியுள்ளார். அதுவரை ராம.நாராயணன் அவர்களுக்கு “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்திற்கான கதை “இன்று போய் நாளை வா” படத்தின் தழுவல் என்பது தெரியாமல் இருந்திருக்கும் போல!
விவரம் அறிந்த ராம.நாராயணன், கதைக்கான ராயல்டியை பாக்யராஜுக்கு கொடுப்பதாக வாக்களித்துள்ளார். எதிர்பாராத விதமாக ராம.நாராயணன் உடல் நலம் கோளாறு காரணமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்துவிட்டார். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பாக்யராஜும், கலைஞானம் அவர்களும் ராம.நாராயணனின் மகன் முரளியை சந்தித்து இந்த விஷயம் அனைத்தையும் சொல்லியுள்ளனர். விஷயத்தை கேட்ட முரளி, தன் தந்தை வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக ராம.நாராயணன் அவர்கள் சொன்ன ராயல்டி பணத்தை குறையின்றி பாக்யராஜுக்கு கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு பற்றி கூட எழுத்தாளர் கலைஞானம் சமீபத்தில் நடந்த எழுத்தாளர்கள் தேர்தல் சம்மந்தமாக நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாக சினிமா என்றால் பொய், பித்தலாட்டம், ஏமாற்றம் என்று தான் பலர் ஏளனம் செய்வர். அதுவும் உண்மை என்று பல நேரங்களில் நாம் கேட்டு அறிந்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு வட்டத்தில் இப்படிப்பட்ட நல்ல தயாரிப்பாளர்கள் இருப்பதும் ஒரு விதத்தில் ஆச்சரியம் தான். மனதார பாராட்டுவோம் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளியை.