“தாரை தப்பட்டை” திரைப்பட விமர்சனம்:

Thaarai Thapattai Review
நடிகர்கள்: கதாநாயகன் சன்னாசியாக சசிகுமார், கதாநாயகி சூறாவளியாக வரலக்ஷ்மி சரத்குமார், வில்லன் கருப்பையாவாக R.K.சுரேஷ், சாமி புலவராக G.M.குமார், கோட்டி, கலைவாணி, ராம்ராஜ், அந்தோணி தாஸ், தான்யா, சஹானா, அக்ஷயா, காயத்ரி ரகுராம், சுஜாதா, ஜோசப்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இயக்குனர்: பாலா, ஒளிப்பதிவு: செழியன், இசை: இளையராஜா, படத்தொகுப்பு: G.சசிகுமார், சண்டைப்பயிற்சி: மிராக்கில் மைகேல், நடனம்: தினேஷ், பாபா பாஸ்கர், ராதிகா, பிருந்தா., பாடல்கள்: இளையராஜா, மோகன்ராஜன், தனிக்கொடி, தயாரிப்பு: சசிகுமாரின் கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்.

இயக்குனர் பாலாவின் மற்றுமொரு படைப்பு “தாரை தப்பட்டை”. இப்படத்தில் பாலாவின் வளர்ச்சி, கொச்சையான வசனங்களும் மிக கொடூரமாக அமைக்கப்பட்டுள்ள ரத்த வெறி சண்டைக் காட்சிகள். அன்றைய முதல்வரிடம் பரிசு பெற்ற தவில் வித்வான் சாமிபுலவர். இவருடைய மகன் சன்னாசி கரகாட்ட கூத்து நடத்துபவர். சன்னாசியின் குழுவில் கரகாட்டக்காரியாக வருபவர் சன்னாசியின் முறை பெண் சூறாவளி. சங்கீதம் சற்று தரம் தாழ்ந்து சென்றுள்ளது என்று உணர்ந்து சாமி புலவர் தன்னுடைய தவில் வாசிக்கும் கலையை முழுவதுமாக கைவிட்டுவிட்டு மதுவுக்கு அடிமையாகி வீட்டிலே தன்னுடைய பொழுதை கழிபவராக கதாபாத்திரம் கொண்டுள்ளார்.

சன்னாசி தன்னுடைய மற்றும் தன்னை நம்பியுள்ள கலைஞர்களின் வயிற்று பசியை போக்க கரகாட்ட கூத்து கம்பெனியை நடத்தி வருகிறார். சூறாவளியின் நடனத்தை பார்பதற்காகவே வெளியூரிலிருந்து இவர்களுடைய கூத்துக்கு நல்ல மார்கெட். நல்ல மார்கெட் அப்புடினா என்னனு யோசிக்கிறீங்கன்னு தெரியுது. நீங்க நினைக்குற அதே தான், அந்த குட்டை பாவாடை நடனம் தான். சற்று ஆபாசமாக காட்டப்பட்டாலும் அது தான் அந்த கலைஞர்கள் உண்மையில் படும் துயரம். சூறாவளியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமாரின் நடனம் பிரமாதம். அவருடைய நடிப்புக்கு ஒரு அப்ளாஸ்.

ஒரு கச்சேரிக்காக சன்னாசியின் குழு அந்தமானுக்கு அழைத்து செல்லப்படுகிறது. ஆனால் அந்தமானில் என்று சொல்கிறார்களே தவிர அந்தமானை காட்டும் அளவுக்கு ஒன்னும் பெரிய காட்சிகள் அமைக்கப்படவில்லை. அதுக்கு பாலா பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு பெரிய டவுனை காண்பித்திருக்கலாம். சன்னாசியை விரும்பும் சூறாவளிக்கு, சூறாவளியின் தாய் விருப்பப்படி கருப்பையாவை நல்லவன் என்று நினைத்து அவனுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் சன்னாசியாக வரும் சசிகுமார். பின்வரும் காலத்தில் கருப்பையாவின் உண்மை முகம் தெரிய, சூறாவளி என்ன ஆனார் என்பது தான் மீதமுள்ள கதை.

சசிகுமார் தன்னுடைய ரெகுலர் நடிப்பை செய்துள்ளார். சூறாவளி கதாபாத்திரத்தை தைரியமாக ஒப்புக்கொண்டு, அந்த கதாபாத்திரத்திற்காக கவர்ச்சியான ஆடைகளை உடுத்தி நடிக்க ஒப்புக்கொண்ட வரலக்ஷ்மி சரத்குமாரை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். டிஸ்கவரி சானல் ஊழியர்கள் மற்றும் ஆஸ்ட்ரேலியா கவர்னரிடம் சாமி புலவர் G.M.குமார் தான் ஒரு இசை கலைஞர் என்ற திமிரில் நடந்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களை ஈர்க்கிறது. வில்லன் கருப்பையாவாக வரும் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இந்த படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய நடிப்பிலும் குரலிலும் அசத்துகிறார் சுரேஷ். தமிழ் சினிமாவுக்கு, சுரேஷ் வில்லன் நடிகராக ஒரு நல்ல வரவு.

படத்தில் கொச்சையான வசனங்களுக்கும் அறுவெறுப்பான காட்சிகளுக்கும் பஞ்சம் வைக்கவில்லை இயக்குனர் பாலா. படத்தின் முதல் பாதி கலகலப்பாக இருந்தாலும், இடைவெளிக்கு பின் படத்தில் ஈர்ப்பு குறைகிறது. கடைசி இருபது நிமிடங்கள் அருவெறுப்பூட்டும் ரத்தம் படிந்த சண்டைக்காட்சிகள்.

செழியனின் ஒளிப்பதிவு அட்டகாசம். படத்தின் கதாநாயகன் மற்றும் முதுகெலும்பு சாத் சாத் நம்ம இசைஞானி இளையராஜா தான். குறிப்பாக அந்த அருவெறுக்கத்தக்க காட்சிகளை தன்னுடைய இசையால் மறைக்க மிகவும் உழைத்திருக்கிறார். பின்னணி இசையிலும் சரி பாடல்களுக்கான இசையிலும் சரி நாம் அந்த பழைய இளையராஜாவை மீண்டும் பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் “தாரை தப்பட்டை” படத்தின் இறுதி இருபது நிமிட காட்சியை பார்க்க இதயம் சற்று பலமாக இருக்கனும். இத்தகைய அருவெறுக்கதகுந்த காட்சிகளை தன்னுடைய அடுத்த படங்களில் பாலா குறைத்து கொண்டால் அவருக்கும் நல்லது, அதை பார்க்கிற பார்வையாளர்களுக்கும் நல்லது. அது மட்டுமின்றி அதை தயாரிக்கிற நிறுவனத்துக்கும் நல்லது. கொஞ்சம் மாறுங்க பாலா.

Leave a Response