இஞ்சி இடுப்பழகி திரைவிமர்சனம் – பேராசை படுபவர்களுக்கு ஒரு பாடம்

inji idupalagi review

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தை அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் கோவேலமுடி பிரகாஷ் ராவ் இயக்கியுள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே.எஸ். பிரகாஷ் ராவ்’வின் பேரனும் இயக்குனர் ராகவேந்திரா ராவ் மகனும் ஆவர். சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இயக்குனரின் அறிமுகப்படம் தான் இது. தெலுங்கில் பொம்மலாட்டா என்ற முதல் படத்தை இயக்கியுள்ளார். இரண்டாவது படம் தான் இந்த இஞ்சி இடுப்பழகி. இதை ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கியுள்ளார். ஆக்ஷன் அடிதடிக்கு பெயர்போன தெலுங்கு சினிமாவில், அது எதுவுமே இல்லாமல் வித்தியாசமான படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர்.

இந்த கதை கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை. படம் முழுவதுமே குண்டு உடம்புடனே வருகின்றார் அனுஷ்கா. என்ன தான் படத்திற்காக உடல் எடையை ஏற்றினாலும், பெருத்த இடுப்புவேண்டும் என்பதற்காக சில பல சித்துவேலைகளை கையாண்டு கச்சிதமாக இடுப்பை பலூனாக மாற்றியுள்ளார். படம் முழுக்க திண்ணி பண்டாரமாகவே நடித்து நம்மை கவர்கின்றார் அனுஷ்கா. என்ன தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றாலும், கதாநாயகி என்றால் சிக்குன்னு சின்ன இடுப்புடன் இருந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். அதையும் மீறி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியமாக முன்வந்த அனுஷ்காவை பாராட்டி தான் ஆகவேண்டும்.

இந்தப்படம் ஒரு குண்டு பெண்ணின் வாழ்கையை மட்டும் சொல்லாமல், சமீப காலமாக உடலை குறைக்கிறேன், தொப்பையை குறைக்கிறேன் என்று மூலைக்கு மூலை கடையை திரந்துவைத்திருக்கும் மோசடிக்கும்பல் பற்றியும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் ஒரு முழுமையான விளக்கம் கொடுக்காமல் மேலோட்டமாக காட்டியுள்ளனர். அந்த மோசடி கும்பல்கள் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக அலசி இருந்தால், மக்கள் கொஞ்சம் மேலும் சுதாரிப்பாக இருக்க உதவும். மற்றபடி படம் ஒரு வழக்கமான காதல் கதையம்சம் கொண்ட படம் தான். குண்டுபையனாக இருந்த மாஸ்டர் பாரத் இந்த படத்தில் ஒல்லியாக மாறியுள்ளார். குரல் தான் மிகவும் கரகர என உள்ளது.

படத்தில் ஆர்யாவை பற்றி சொல்ல புதியதாக ஒன்றும் இல்லை. இரண்டு ஹீரோயின்களை மாறி மாறி ரொமான்ஸ் செய்கின்றார். கொஞ்சம் லிப்லாக், அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியம் செய்கின்றார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையால் ஆர்யாவை பற்றி பெரிதாக கூற ஒன்றும் இல்லை. இரண்டாவது நாயகியாக வரும் சோனல் சௌகான், சிம்ரன் என்ற கதாபாத்திரமாக வருகின்றார். சிம்ரனின் கவர்ச்சியில் கிரங்கிய தமிழ் ரசிகர்கள், சோனல் கவர்ச்சியில் கிரங்குவது கொஞ்சம் சிரமம் தான். படத்தில் அநேக இடங்களில் தெலுங்கு வாசம் வீசுவதை தவிர்க்க முடியவில்லை. அதுவும் பின்னணியில் பேசம்படும் வாய்ஸ், புகை நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை போன்று உள்ளது.

மொத்தத்தில் இப்படம் சிறுத்த இடுப்பு வேண்டும் என்று பேராசை படுபவர்களுக்கு ஒரு பாடம்.

Satheesh Srini

Leave a Response