தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய படங்கள் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும், ஒரு படம் முடிவடைந்த பின்னர் தான் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுகின்றனர். முதல் படம் முடியும் தருவாயில் உள்ளபோது தான் அடுத்த படத்தை கமிட் செய்கின்றனர். ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இப்படித்தான் உள்ளனர். இவர்கள் வரிசையில் இருந்த கமல் திடீரென இந்தவருடம் வேகம் கொடுத்து விட்டார். அவருடைய மூன்று படங்கள் இந்த வருடம் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்த படங்களை கமிட் செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றார்.
இவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்து ஓவர் ஸ்பீடில் சென்றுகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தனுஷிற்கு தற்பொழுது உள்ள தகவலின்படி கைவசம் ஏழு படங்கள் உள்ளது. அவற்றில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த 5 படங்களை வரிசையாக கமிட் செய்துள்ளார். தொடர் தோல்வியில் துவண்டுவந்த தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுதந்த படம் விஐபி. அதன் காரணமாகவே இரண்டாம் பாகத்தில் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்த விஐபி 2 ரிலீசிற்கு தயாராகிவிட்டது. விஐபி 2 என்று இருந்த இப்படத்தின் பெயரை திடீரென ‘தங்க மகன்’ என்று மாற்றிவிட்டனர். இதற்கு அடுத்து பிரபு சலாமன் இயக்கிவரும் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். பூச்சியப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் தங்கமகனும், மூன்று மாத இடைவெளியில் பிரபு சல்மான் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்திலும், எதிர் நீச்சல் துரை செந்திகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் படத்திற்கு வடசென்னை என்ற தலைப்புடன் கதை ரெடியாகிவிட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. மேலும் தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்திலும், மாரி படத்தின் இராண்டாம் பாகத்திலும் நடிப்பதற்கு தனுஷ் முடிவு செய்துள்ளார். மாரி படம் தனுஷ் ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம். இதனால் பெரும்பாலான ரசிகர்கள் படத்தை விரும்பவில்லை. இருப்பினும் மாரி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு இப்பொழுதே வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் தனுஷ். மாரியை இயக்கிய பாலாஜி மோகன் தான் இப்படத்தை இயக்க உள்ளார். ஆனால் செல்வராகவன் படம் முதலில் சூட்டிங் துவங்குமா? அல்லது பாலாஜி மோகனின் படம் முதலில் துவங்குமா? என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை. இந்த படங்களின் படப்பிடிப்பிற்கு இடைப்பட்ட நாட்களிலேயே ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். ஆனால் இன்னும் அப்படத்தை பற்றிய முழுவிவரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அதுகுறித்தும் அறிவிப்புகள் வெளிவரும்.




