உதயமானது தமிழர் விடியல் கட்சி:

இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது பல்வேறு மக்கள் விரோத திட்டத்தையும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும், தனி மனிதனின் அடிப்படை உரிமையான உணவு, உடை, உறைவிடம் கூட இல்லாமல் தமிழர்களை சொந்த நாட்டு அகதிகளாக துரத்த மீத்தேன், நியூட்ரினோ, அணு மின்நிலையங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்துக்குள் திணிக்கிறது.

இந்த அடக்குமுறையில் இருந்து எமது மக்களையும், மண்ணையும், காத்து வருங்கால பிள்ளைகளுக்கு, எமது தமிழ் மண்ணை மனிதர்கள் வாழக்கூடிய இடமாக தரவேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கு உள்ளது.

அதன் காரணமாக இளைஞர்கள், மாணவர்கள், சமூக பொறுப்புள்ள பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து “தமிழர் விடியல் கட்சி”யை துவங்குகின்றோம். கட்சியின் கொடியை (தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்) தலைவர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்.

முதல்கட்டமாக காவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து “தமிழர் விடியல் கட்சி” (தஞ்சாவூரில் உள்ள பனகல் கட்டிடம், பழைய பேருந்து நிலையம்) அருகில் மக்கள் ஒன்றுதிரள கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

தொடர்ந்து மக்களுக்கு எதிரான மற்ற அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடி தடுத்து நிறுத்துவோம் என்று “தமிழர் விடியல் கட்சி” உறுதி ஏற்றுகொள்கிறது.

இவ்வாறு “தமிழர் விடியல் கட்சி”யின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.டைசன் மற்றும் உ.இளமாறன் தங்களுடைய பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய கட்சி 09 மார்ச் 2015 அன்று தஞ்சாவூரில் புதிய கொடியை அறிமுகப்படுத்தி துவக்கியுள்ளனர்.

Leave a Response