“லிங்கா” விநியோகஸ்தர்களுக்கு உண்ணா விரதம் இருக்க அனுமதிக்கணும் – கோர்ட்டு உத்தரவு:

சென்ற தீபாவளி அன்று ரஜினி நடித்து, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் “லிங்கா”. இந்த படம் வெளிவந்த சில நாட்களிலேய சில விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு “லிங்கா” படம் வெளியிட்டதில் நஷ்டம் என அரசால் புரசலாக கூறிவந்தனர். அவர்கள் கூறுவதைப்போல் சமுகவளைதலங்களிலும் மற்றும் சில இணையதளங்களில் செய்தியாகவும் வந்தவண்ணம் இருந்தன.

சில நாட்களுக்கு முன்பு நம் “ஒற்றன் செய்தி” ஊடகத்திற்கு அலைபேசியில் பேசிய விநியோகஸ்தர் சிங்காரவடிவேலன், தான் “லிங்கா” படத்தை வெளியிட்டு பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். அப்போதே அவர், அவரும் அவருடன் “லிங்கா” படம் திரையிட்டதில் நஷ்டம் அடைந்த சில விநியோகஸ்தர்களும் ரஜினினியை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ரஜினி கிறிஸ்துமஸ் வரை பொருத்திருக்குமாறு தகவல் தெரிவித்தார் எனவும் நம்மிடம் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் முடிந்தும், சிங்காரவடிவேலன் அல்லது மற்ற விநியோகஸ்தர் எவருக்கும் ரஜினி இடமிருந்தோ அல்லது படத்தின் தயாரிப்பாளர் “ராக்லைன்” வெங்கடேஷ் இடமிருந்தோ எந்த ஒரு பதிலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட சிங்காரவடிவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்கள் சென்னை காவல் துறை ஆணையரிடம் ஜனவரி 10, 2014 காலை 10:00 முதல் மாலை 5:00 வரை “லிங்கா” திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை காரண காட்டி தாங்கள் உண்ணா விரதம் இருக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். தனி நபர் மீது காரணம் காட்டி உண்ணா விரதம் இருக்க காவல் துறை அனுமதிக்காது என்று காரணம் காட்டி அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சிங்காரவடிவேலன், பால விஸ்வநாதன், டி.மன்னன் மற்றும் மகா பிரபு ஆகியோர், ஜனவரி 02 மற்றும் 05, 2015 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு வெவ்வேறு மனுக்களை அளித்துள்ளனர். அதில் தாங்கள் ஜனவரி 10, 2015 அன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் அமைதியான முறையில் உண்ணா விரதம் இருக்க சென்னை மாநகர காவல் துறையிடம் அனுமதி கோரி அணுகியதாகவும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே தங்களுக்கு அந்த குறிப்பிட்ட தேதியில் அமைதியான முறையில் உண்ணா விரதம் இருக்க சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்க நீதி துறை உத்திரவிட வேண்டும் என அவர்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த மாண்புமிகு நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மனுதாரர்கள் கேட்டப்படி சென்னை மாநகர காவல் துறை உண்ணா விரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஜனவரி 09, 2015 காலை 11:00 மணிக்குள் சென்னை மாநகர காவல் துறை மனுதாரர்களுக்கு உண்ணா விரதம் இருக்க அனுமதிக்கப்பட்ட இடத்தை தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.