பொங்கல் ரிலீஸாக சேரன் படம் ; C2H மூலம் வெளியிடுகிறார்..!

‘ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இது.

எல்லா தயாரிப்பாளரையும் போல தனது படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு, அது ஒரு வாரம் ஓடி பிக்கப் ஆவதற்குள் அடுத்த வாரம் ஏதேனும் பெரிய படம் ரிலீஸானால் அந்தப்பட ரிலீஸிற்காக தனது படத்தை காவு கொடுப்பதில் சேரனுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் இதற்கு தீர்வுகாணும் விதமாக இயக்குனர் சேரன் உருவாக்கியுள்ள நிறுவனம் தான் C2H. அதாவது சினிமா TO ஹோம். தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக மக்களுக்கு கொண்டும் செல்லும் வழியை இந்த C2H உருவாக்கியுள்ளது.

தனது ஒன்றரை வருட கடின உழைப்புடன் இதை சாத்தியமாக்கியுள்ள சேரன் இந்த C2H மூலமாக வரும் பொங்கல் தினத்தன்று தான் இயக்கியுள்ள ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளியிடுகிறார். அடுத்தடுத்த வாரங்களில் இதேபோன்று நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் அர்ஜுனன் காதலி, வாராயோ வெண்ணிலாவே ஆகிய படங்கக்ளியும் ரிலீஸ் செய்கிறார்.

இதன்மூலம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படங்கள் டிவிடிக்களாக மாற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள C2H ஏஜென்ட்டுகளால் வெறும் ஐம்பது ரூபாய்க்கே வீடு தேடி வந்துவிடும். மேலும் டி.டி.எச், ஆன்லைன், செட் ஆப் பாக்ஸ், லோக்கல் கேபிள் ஆகியவற்றில் கூட இதை ஒளிபரப்ப இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே படம் பார்க்கும் வசதி உருவாகிறது.

இதனால் திருட்டு விசிடியின் ஆதிக்கம் வெகுவாக குறைவதோடு நாளடைவில் அவர்களும் இந்த ஒரிஜினல் டிவிடியையே வாங்கி விற்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதன் லாபம் எல்லா வகைகளிலும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் இயக்குனர் சேரன்.

தொலைநோக்குடன் சேரன் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்..!,