நாங்கள்லாம் ஏடாகூடம் – விமர்சனம்

வடசென்னை பகுதியில் பிரபலமான கந்துவட்டி, மற்றும் பெட்டிங் தாதா தேவராஜ். அதே ஏரியாவில் குத்துச்சண்டை மாஸ்டர் டோக்கியோ மணி.. சிறு வயது முதல் எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வரும் மாரி அவரிடம் மாணவனாக சேருகிறார். அவனுக்கு குத்துச்சண்டை கற்றுக் கொடுத்து பெரியவனாக்குகிறார் மாஸ்டர்.

அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு குத்துச்சண்டை போட்டியில் தன்னுடைய ஆள் ஜெயித்துவிட்டால் தனக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பதால், மாஸ்டரிடம் குத்துச்சண்டையில் அனுபவமில்லாத ஆளை அனுப்பச் சொல்லும் தாதா தேவராஜ் அதற்கு பதிலாக மாஸ்டர் தனக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் சொல்கிறார்.

அரைமனதாக ஒப்புக்கொள்ளும் மாஸ்டர் தன்னிடம் நன்கு பயிற்சி பெற்ற இன்னொரு மாணவரான குமாரை அனுப்புவதற்கு பதிலாக குறைந்த அனுபவம் பெற்ற நாயகன் மாரியை அனுப்பி வைக்கிறார். ஆனால் அதில் மாரி வென்றுவிட, மாஸ்டரின் மேல் கோபமாகிறார் தாதா தேவராஜ்

அந்த அவமானத்திற்கு பழிவாங்கவும் தான் இழந்த கெளரவம், பெட்டிங் பணம் இரண்டையும் மீட்க, மற்றொரு போட்டிக்கு பந்தயம் கட்டுகிறார் தாதா.. அந்த பந்தயத்தில் தன்னுடைய ஆள் தோற்றுவிட்டால், இனி பந்தயம் கட்டுவதையே விட்டுவிடுவேன் என்று தாதா சொல்ல, அதனால் தனது சீனியர் மாணவரான குமாரை தயார் செய்கிறார். ஆனால் குமாரோ தாதாவின் பணத்தால் விலைக்கு வாங்கப்படுகிறார்.

இதை அறிந்த மாரி, குமார் எந்த சூழ்நிலையால் இப்படி மனம் மாறினான் என்பதை அறிந்து அந்த பந்தயத்தில் தான் இறங்க முடிவெடுக்கிறார். இறுதியில், அந்த போட்டியில் வென்று மாஸ்டரின் கௌரவத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ். இதில் தாதாவால் பாதிக்கப்பட்ட ஒரு முன்னாள் பாக்ஸரின் மகள் அவரை பழிதீர்ப்பதற்காக நாயகனுடன் கைகோர்த்து, காதல் கொண்டு, தனது பழியை தீர்த்துக்கொள்வது கிளைக்கதை..

வடசென்னையை சுற்றி நடக்கும் பாக்சிங் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களம் அருமை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் தான் நிறைய சொதப்பல்கள். படத்தில் எந்தவொரு காட்சியும் கோர்வையில்லாமல் எடுத்திருப்பதால் படத்தை ரசிக்க முடியாமல் போகிறது..

பட்ஜெட் படம் என்பதாலோ என்னவோ பத்து கதாபத்திரங்களை தவிர ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் யாரும் கண்ணிலேயே படாததால் குறும்படம் போலத்தான் படம் நகர்கிறது. நாயகன் மாரியாக நடித்திருக்கும் மனோஜ் தேவதாஸ் இயக்குனர் சொல்லிக்கொடுத்தபடி மட்டும் ஆடியிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது…

தனது குடும்பத்தை சீரழித்த வில்லனை பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார் வீணா நாயர்.. பாக்ஸிங்கில் குறிக்கோளுடன் சுற்றும் நாயகனும் தாதாவை பழிவாங்க துடிக்கும் நாயகியும் இலக்கை அடைய துடிப்பதால் அவர்களுக்கான காதல் காட்சிகளை அளவாக குறைத்திருக்கும் இயக்குனர் ஆர்.விஜயகுமாரை பாராட்டலாம்.

தாதா தேவராஜாக வில்லத்தனத்தில் மிரட்டும் ராஜேஷ் தமிழ் சினிமாவில் இனி வில்லனாக வலம் வருவர் என நம்பலாம். மாஸ்டராக வரும் ஜார்ஜ் விஜய்யும் நேர்மையான நடிப்பை கொடுத்திருக்கிறார். எந்நேரமும் எதையாவது தின்றுகொண்டிருக்கும் சாப்பாட்டுராமனாக வரும் விசாகர் பாக்ஸிங் தவிர அனைத்தையும் செய்கிறார். சரவணன் பிள்ளை ஒளிப்பதிவில் வடசென்னையை வேறொரு பரிமாணத்தில் அழகாக படமாக்கியிருகிறார்கள். படத்திற்கு இன்னும் செலவு செய்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும் என்பது உண்மை.