ர – விமர்சனம்

அஜய்யும் ரென்யாவும் காதலர்கள்… ரென்யா வீட்டில் காதலை எதிர்ப்பதால் அஜய் அவரை அழைத்து சென்று பதிவுத்திருமணம் செய்துகொள்கிறார். முதலிரவு தினத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து அஜய் தண்ணியடித்து மயங்கிவிட, அன்றிரவு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைகிறார் ரென்யா.

சில நாட்கள் சோகத்தில் கழிக்கும் அஜய்க்கு சில விசித்திரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ரென்யாவின் ஆவி தன் வீட்டில் உலாவுவதாக நம்பும் அவர், ஒரு விஞ்ஞானி மூலமாக ரென்யாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி பாதியிலேயே முறிகிறது.

மறுநாளே விஞ்ஞானி மர்மமான முறையில் இறக்கிறார்.. அடுத்து வரும் நாட்களில் அஜய்யின் அக்காவும் ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறார். இவர்களின் தொடர் மரணத்திற்கு காரணம் யார்..? விஞ்ஞானமா, ஆவியா..? அஜய்யாவது தப்பித்தாரா இல்லையா என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ்..

ஒரு திகில் கிளப்பும் ஆவிப்படம் தான் இது என்பதில் சந்தேகமில்லை.. அஜய்யாக நடித்திருக்கும் அஷ்ரப்பின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. சில காட்சிகளிலேயே வந்து மரணத்தை தழுவும் அதிதி செங்கப்பா பரிதாபப்படுத்துகிறார். ராஜ் ஆர்யனின் இசையும் சரவணனின் ஒளிப்பதிவும் படத்தின் திகிலை குறையவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

ஹாலிவுட் ஸ்டைலில் ஒளிப்பதிவுடன் படத்தை ரிச்சாக தந்திருப்பதற்காக இயக்குனர் பிரபு யுவராஜை பாராட்டும் அதே வேளையில் ஆவியுடன் பேச முற்படும்போது தென்படும் சிவப்பு கதவு, இருவரின் மரணத்துக்கு காரணமாக சொன்ன அற்பமான காரணம், விஞ்ஞானி மரணமடைந்ததன் மர்மம் இவற்றை எல்லாம் தெளிவாக விளக்காமல் அப்படியே விட்டிருப்பது படத்திற்கு மைனஸ். தான். ஆனால் படம் உங்களை பல காட்சிகளில் பயமுறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.